திருப்பதி கோவிலில் ஆகமங்கள் மீறப்படுகின்றன பிரதான அர்ச்சகர் பேட்டி


திருப்பதி கோவிலில் ஆகமங்கள் மீறப்படுகின்றன பிரதான அர்ச்சகர் பேட்டி
x
தினத்தந்தி 16 May 2018 3:45 AM IST (Updated: 16 May 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஆகமங்கள் மீறப்படுவதாக பிரதான அர்ச்சகர் ஏ.வி.ரமணா தீட்சிதர் கூறினார்.

சென்னை,

திருமலை திருப்பதி கோவில் பிரதான அர்ச்சகர் மற்றும் ஆகம ஆலோசகர் ஏ.வி. ரமணா தீட்சிதர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் ஆகம விதிப்படி ஆராதனைகள் நடந்துவருகிறது. பல தலைமுறை களாக 4 குடும்பத்தினர் ஆராதனை செய்துவருகிறோம். தற்போது அரசு புதிய சட்டத்தை கொண்டுவந்து வம்சாவழியாக ஆராதனை செய்யும் திட்டத்தை ரத்து செய்துள்ளது. தற்போது பரம்பரையாக ஆராதனை செய்துவருபவர்களை நீக்கிவிட்டு புதிய அர்ச்சகர்களை அரசு நிய மித்துவருகிறது.

இதனால் கோவிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது, புனிதத்தன்மை பாதிக்கப்படுகிறது. ஆகமங் களை மீறி ஆராதனைகளை செய்ய அதிகாரிகள் கட்டாயப்படுத்துகிறார்கள். குறிப்பாக சுப்ரபாதம் நிகழ்ச்சி அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது. இதனை அதிகாலை 3 மணிக்கும், 2 மணிக்கும் நடத்த அதிகாரிகள் கூறுகின்றனர். ஆங்கில புத்தாண்டு அன்று அதிகாலை நடையை திறந்து ஆராதனை செய்ய உத்தரவிடுகின்றனர்.

பெருமாளுக்கு அளிக்கப் படும் நைவேத்தியம், சாஸ்திரத்தில் இருப்பதுபோன்று இல்லாமல் குறைவான அளவு தயாரிக்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் அர்ச்சகர்கள் குடியிருப்பு, ஆயிரம் கால்மண்டபம் மற்றும் ரதமண்டபங்கள் ஆகியவற்றை இடித்து தள்ளிவிட்டது. அர்ச்சகர் மட்டும் அல்லாது பக்தர்களுக்கும் பல்வேறு வகைகளில் அநியாயங்கள் நடந்துவருகிறது.

தலைவர்கள், சினிமா பிர பலங்கள், அரசியல்வாதிகள் கோவிலுக்கு வரும்போது பெருமாளுக்கான ஆராதனை முறைகளை குறைக்க அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோன்று வி.ஐ.பி.க்கள் வருகையால் பெருமாளின் முக்கிய சேவையான தோமாலை சேவை மற்றும் ஆகம மந்திரங்களை மாற்றி அமைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

பெருமாளின் பழமையான ஆபரணங்களை 1996-ம் ஆண்டு வரை பரம்பரை அர்ச்சகர்கள் பாதுகாப்பாக வைத்திருந்தனர். தற்போது இந்த ஆபரணங்கள் எங்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை. தற்போது புதிய ஆபரணங்கள் மூலம் தான் பெருமாள் அலங்கரிக்கப்படுகிறார். பல்வேறு விஷயங்களில் ஊழல் நடந்துவருகிறது. உண்டியல் வருமானத்தை கோவில் நலனுக்காக மட்டும் செலவிட வேண்டும். கோவிலை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வந்தபோது அதனையும் அரசு தடுத்துவிட்டது.

பெருமாளின் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு குழு அமைத்து கோவிலை சீரமைக்க வேண்டும். இதற்காக ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, ஆந்திர மாநில கவர்னர், முதல்-மந்திரி ஆகியோருக்கு மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அர்ச்சகர்கள் வெங்கடபதி தீட்சிதர், ராம கிருஷ்ண தீட்சிதர் மற்றும் அனுஷா ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story