‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் சொல்லி பழகுங்கள் குமரி அனந்தன் வேண்டுகோள்


‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் சொல்லி பழகுங்கள் குமரி அனந்தன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 May 2018 4:00 AM IST (Updated: 16 May 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

தொலைபேசி ஒலித்தால் ‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் சொல்லி பழகுங்கள் என்று குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழக கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை பிரசாரம் மேற்கொண்டார்.

திருச்செந்தூர் சென்றடைந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர், விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் தமிழ் வளர்ச்சி குறித்து கி.வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை.

இருந்தபோதிலும் தனது கருத்தை நண்பர் ஒருவர் மூலம் தயார் செய்து அதை கூட்டத்தில் படிக்கச் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

உலகத்தில் தாய்மொழிகள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. உலக மொழிகள் எதையும் உலக மக்கள் கற்கலாம். ஆனால் ஒவ்வொரு குழந்தையும் தனது தாய் மொழியையும், உலக பொது மொழியையும் கட்டாய பாடமாக படிக்க வேண்டும்.

உள்ளூரில் தனது தாய்மொழியை பேசும் ஒருவர் பொது மொழியை, தான் செல்லும் நாடுகளில் பேசலாம். நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச முடியும். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, தமிழிலும் கேள்வி கேட்கும் உரிமையை பெற்றேன்.

இதைத்தொடர்ந்து தமிழில் அஞ்சல் அட்டை, காசோலை, ரெயில் பயண முன்பதிவு படிவம், பண விடைத்தாள்(மணியார்டர்) ஆகியவை பெறப்பட்டன.

நமது வீட்டில், பணிபுரியும் இடங்களில் தொலைபேசி ஒலித்தால் ‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் என்று கூறுவதை முதல் பழக்கமாக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story