நேரு பூங்கா - சென்டிரல் இடையே ஆய்வுப்பணி நிறைவு


நேரு பூங்கா - சென்டிரல் இடையே ஆய்வுப்பணி நிறைவு
x
தினத்தந்தி 16 May 2018 4:00 AM IST (Updated: 16 May 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நேரு பூங்கா-சென்டிரல் இடையே 2 நாட்களாக நடந்து வந்த மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுப்பணி நிறைவடைந்தது.

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக ஷெனாய்நகர்-நேரு பூங்கா 2-வது வழிப்பாதை மற்றும் நேரு பூங்கா-சென்டிரல் இடையே சுரங்கப்பாதையில் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தனது குழுவினருடன் சென்னைக்கு வந்து கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது முதல் கட்டமாக டிராலியில் சென்று அவர் ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி வரை ஷெனாய்நகர் முதல் சென்டிரல் வரை மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தினார். சுரங்கப்பாதையில் குறிப்பிட்ட இடங்களில் மெட்ரோ ரெயிலை நிறுத்தி சுரங்கத்திற்குள் நடந்து சென்றும் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுப்பணி நேற்று இரவுடன் நிறைவடைந்தது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது.

பாதுகாப்பு ஆணையர் ஷெனாய்நகர்-நேரு பூங்கா இடையே 2-வது பாதையில் 5.6 கிலோ மீட்டரும், நேரு பூங்கா- சென்டிரல் இடையே 1-வது வழிப்பாதையில் 2.5 கிலோ மீட்டர் உள்ளிட்ட 8.1 கிலோ மீட்டர் தூரம் ஆய்வு செய்தார். அப்போது ரெயில் பாதைகள், சிக்னல்கள், பாதுகாப்பு குறித்த அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அத்துடன் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் பணி நிறைவடைந்த சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தின் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் தளம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுவின்போது பயணிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?, சிக்னல்கள் செயல்படும் விதம் எப்படி?, ரெயில் நிலையங்கள் மற்றும் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தீ தடுப்பு சாதனங்கள் செயல்படும் விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். எழும்பூர், சென்டிரல் ஆகிய ரெயில் நிலையங்களில் அதிகளவில் பயணிகள் கையாளப்படுவதால் கூடுதலாக பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி தரவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கான ஆய்வு அறிக்கை ஒரு வாரத்தில் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதற்கு பிறகு ரெயிலை இயக்குவது குறித்து பரிசீலனை செய்வோம்.

இதனைத்தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர், வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே 4.5 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் ஆய்வுப்பணி நடக்க இருக்கிறது. இந்த ஆய்வுப்பணியின் போது பாதுகாப்பு ஆணையர் முதலில் டிராலியிலும் பின்னர் மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கியும் ஆய்வு மேற்கொள்வார்.

Next Story