நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி


நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 17 May 2018 4:51 AM IST (Updated: 17 May 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி தே.மு.தி.க. வக்கீல் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி (வயது 47). இவர், மாணவிகள் சிலரை செல்போனில் அழைத்து உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தும் உரையாடல் வெளியானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தே.மு.தி.க.வை சேர்ந்த வக்கீல், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘நிர்மலாதேவி வழக்கில், சம்பந்தப்பட்டுள்ள உயர் பதவி வகிக்கும், செல்வாக்கு மிக்க நபர்களை தப்பிக்க வைப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கிறது. இந்த வழக்கில், தமிழக கவர்னர் பெயரும் வருகிறது. அதனால், இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால், சரியாக இருக்காது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும். சி.பி.ஐ. விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.தண்டபாணி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், ‘நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கின் விசாரணை முடியவில்லை. அப்படி இருக்கும்போது, போலீசாரின் விசாரணை சரியில்லை என்று எப்படி கூறமுடியும்? மேலும், போலீசார் நடத்தும் விசாரணையின்போது, எந்த சூழ்நிலையில் கோர்ட்டு தலையிட முடியும் என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும், நிர்மலாதேவி வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஏற்கனவே ஒரு வழக்கு தொடரப்பட்டு, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் வேண்டும் என்றால், மனுதாரர் தன்னையும் இணைத்துக்கொள்ளலாம்‘ என்றும் நீதிபதி கூறினார்கள். 

Next Story