குரூப்-1 தேர்வில் முறைகேடு: தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குனருக்கு முன்ஜாமீன்


குரூப்-1 தேர்வில் முறைகேடு: தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குனருக்கு முன்ஜாமீன்
x
தினத்தந்தி 17 May 2018 5:26 AM IST (Updated: 17 May 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வாணையத்தின் அதிகாரி காசிராம்குமார் உள்பட சிலரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரன், தேர்வாணைய அதிகாரிகள் மூலம் வினாத்தாளை முன்கூட்டியே பெற்று தங்களது பயிற்சி மையத்தில் படித்தவர்களை முறைகேடாக தேர்ச்சி பெறச் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில் சாம் ராஜேஸ்வரன் முன்ஜாமீன் கேட்டு, சென்னையில் உள்ள 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எங்கள் பயிற்சி மையம் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வின் வினாத்தாள்கள் மூலம் பயிற்சி நடத்தினோம். வேண்டுமென்றே எங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் சாம் ராஜேஸ்வரனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், தொடர்ந்து 8 வாரத்துக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10.30 மணிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், போலீசார் விசாரணைக்காக அழைக்கும்போது ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார். 

Next Story