நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ்கள் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்


நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ்கள் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 17 May 2018 12:00 AM GMT (Updated: 17 May 2018 12:00 AM GMT)

டிரைவர் போதையில் இருப்பதை கண்டறியும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துக்கான புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்துக்கு தமிழ்நாடு போக்குவரத்துக்கழகத்தின் (கோவை) ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்து நேற்று கொண்டு வரப்பட்டிருந்தது. அவற்றின் கட்டுமானம் மற்றும் நவீன வசதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

அவருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் உடனிருந்தனர்.

பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி வருமாறு:-

2 ஆயிரம் புதிய பஸ்களை வாங்க அரசு ஆணையிட்டு இருந்தது. அதன்படி, புதிய கூண்டுகள் கட்டி தயாராக உள்ள முதல் சிற்றுந்து மற்றும் சாதாரண பேருந்து ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். இதில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. 2 ஆயிரம் பஸ்களும் இந்த வடிவமைப்பில் இருக்கும்.

இந்த பஸ்கள் நல்ல தரமாக கட்டப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிதி ஆண்டில் போக்குவரத்துக்கழகங்களுக்கு மேலும் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க இசைவு தெரிவித்துள்ளார்கள். மிக விரைவில் தமிழக போக்குவரத்துக்கழகங்களில் 5 ஆயிரம் புதிய பஸ்கள் இயங்கும்.

இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னவென்றால், தரமான வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ். வசதி, செல்போன் செயலி மூலம் பஸ் வரும் நேரத்தை அறியும் வசதி, சீட் சாய்வை 105 டிகிரியில் இருந்து 115 ஆக உயத்தியிருப்பது, 2 அவசர கால வழிகள் போன்றவை உள்ளன.

ஜி.பி.எஸ். வசதி இருப்பதால் இலவச வைபை தொழில்நுட்பத்தையும் எதிர்காலத்தில் கொண்டு வரமுடியும். அடுத்த பஸ் நிறுத்தத்தை பஸ்சில் தெரிவிக்கும் வசதியையும் கொண்டுவர வழிவகை ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் டிரைவர் இருப்பதை கண்டறியும் கருவி, அவரது இருக்கைக்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. இதை மாதிரியாக பொருத்தி இருக்கிறோம். இன்னும் பல வசதிகள் கொண்டுவரப்படும்.

பேருந்து ரூ.24.7 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டியது அரசின் கடமை. அடமானத்தில் உள்ள சொத்துகளை மீட்கும் நடவடிக்கை படிப்படியாக செய்யப்பட்டு வருகிறது.

போக்குவரத்தை நவீனமயமாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. படுக்கை வசதி, ஏ.சி. வசதி, கழிவறை, மிதவை போன்ற வசதிகள் இனி வரக்கூடிய பஸ்களில் இருக்கும். தனியாருக்கு போட்டியாக அவை அமையும்.

சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு சிற்றுந்து வசதிகளை கொண்டு செல்லும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. 200 பேட்டரி பஸ்களை வாங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

டிரைவர் போதையில் இருந்தால் பஸ் இயங்காது

இந்த பஸ்களில் சிறப்பு வாய்ந்த கருவி ஒன்று இருக்கிறது என்றால், மது போதையில் டிரைவர் இருக்கிறாரா? என்பதை கண்டறியும் கருவிதான். அது மது அருந்தி இருப்பதை கண்டறிவது மட்டுமல்ல, டிரைவர் மது போதையில் இருந்தால் பஸ் என்ஜின் ஸ்டார்ட் ஆகாது.

இந்தக் கருவி, ஸ்டியரிங் அருகே பொருத்தப்பட்டுள்ளது. டிரைவர் தனது சீட்டில் ஏறி உட்கார்ந்ததும் அதிலிருக்கும் குழாயில் முதலில் ஊதவேண்டும். அதன் பின்னர்தான் பஸ்சின் என்ஜினை ஸ்டார்ட் செய்ய முடியும்.

குழாயை ஊதாமல் ஸ்டார்ட் செய்ய முடியாது. குழாயில் ஊதும்போது மது வாடை கண்டறியப்பட்டால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாது. ஆக, பயணிகளுக்கு இதன் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஸ் சக்கரத்தில் சிறிய கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. காற்றின் அழுத்தம் குறையத் தொடங்கியதும் அது டிரைவரின் முன்னே வைக்கப்பட்டுள்ள கருவியில் காட்டப்படும். இதன் மூலம் விபத்து ஏற்படுவதற்கு முன்பே பஸ்சை நிறுத்தி பழுது பார்த்துக்கொள்ள முடியும். 

Next Story