மாநில செய்திகள்

விரைவில் வேலைநிறுத்தம் நடைபெறும் எஸ்.ஆர்.எம்.யூ. பொது மகாசபை கூட்டத்தில் முடிவு + "||" + The strike will take place soon SRMU Decision on the General Assembly meeting

விரைவில் வேலைநிறுத்தம் நடைபெறும் எஸ்.ஆர்.எம்.யூ. பொது மகாசபை கூட்டத்தில் முடிவு

விரைவில் வேலைநிறுத்தம் நடைபெறும்
எஸ்.ஆர்.எம்.யூ. பொது மகாசபை கூட்டத்தில் முடிவு
ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்து மத்திய அரசுக்கு சட்டப்படி நோட்டீஸ் வழங்கி விரைவில் வேலைநிறுத்தம் செய்ய எஸ்.ஆர்.எம்.யூ. பொது மகாசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,

சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன்(எஸ்.ஆர்.எம்.யூ.) பொது மகா சபை கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளராக என்.கண்ணையா மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.


கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இப்போது அவர் 9-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், தலைவராக சி.ஏ.ராஜா ஸ்ரீதர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் மாநில துணைத்தலைவர்கள், துணை பொதுச்செயலாளர்கள், பொருளாளர்கள், கோட்ட தலைவர்கள், செயலாளர்கள் என புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். அதையடுத்து பொதுச்செயலாளர் என்.கண்ணையாவுக்கும், தலைவர் ராஜா ஸ்ரீதருக்கும் எஸ்.ஆர்.எம்.யூ.-வை சேர்ந்த தொழிலாளர்கள் ஆள் உயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் என்.கண்ணையா நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய பென்ஷன் திட்டத்தை மாற்றி உத்தரவாதத்துடன் கூடிய பென்ஷன் மற்றும் குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும். இந்தியா முழுவதும் 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கான மின்மயமாக்கப்பட்ட இருப்பு பாதைகளில் உள்ள மின்சார சாதனங்களை முற்றிலுமாக தனியார்மயமாக்கி, ஒப்பந்ததாரர்கள் மூலம் பணி செய்திட முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் பணியிடங்களை சரண்டர் செய்து வருகின்றனர்.

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று கூறிய மத்திய அரசு, ரெயில்வே துறையில் ஆட்குறைப்பு, ஒப்பந்தம் விடுதல், தனியார் மயமாக்குதல் போன்றவற்றால் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலைகிடைப்பது, எட்டாத கனியாக ஆகிவிடும். எனவே இது நிறுத்தப்பட வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் உள்ள குறைகளை நீக்க வேண்டும். இந்தியாவிலேயே ரெயில் என்ஜின், பெட்டி தயாரித்து வழங்கி கொண்டு இருக்கும் நேரத்தில், அமெரிக்க, பிரான்ஸ் கம்பெனிகளில் இருந்து ரெயில் என்ஜின்களை மத்திய அரசு வாங்கி பன்னாட்டு நிறுவனங்கள் ஆதாயம் அடைவதற்கு வழிவகுக்கிறது.

ரெயில்வே பள்ளிகள் மூடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக மீண்டும் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. அதேபோல், ரெயில்வே மருத்துவமனைகளை தனியார் மயமாக்குவதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இது தொழிலாளர் நலனுக்கு எதிரானது.

ரெயில்வே துறையை தனியார்மயமாக்க நினைக்கும் மத்திய அரசின் தொடர்ச்சியான இந்த போக்கை கண்டிக்கும் வகையில் கூடிய விரைவில் சட்டப்படி நோட்டீஸ் வழங்கி வேலைநிறுத்தம் செய்ய முடிவு எடுத்துள்ளோம். நிச்சயமாக இதை தள்ளிவைக்கமாட்டோம். எந்த பிரச்சினை வந்தாலும் இதில் பின்வாங்கப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.