நெல்லை, மதுரை, கோவை மண்டல கல்லூரிகளில் புதிதாக இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் நெல்லை, மதுரை, கோவை மண்டல கல்லூரிகளில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு, இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் 720 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
சென்னை,
இந்தியாவிலேயே தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், சென்னையில் 4 வளாகங்களிலும், சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 13 உறுப்புக் கல்லூரிகளிலும் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் பயிற்றுவித்து வருகின்றன.
ஆனால், திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல வளாகங்களில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அந்த மண்டலங்களிலும், இளநிலை பட்டப்படிப்புகளையும் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
அதை ஏற்று, ஏழை, எளிய மாணவர்களும் உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கு வசதியாக, தற்போது திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல வளாகங்களில் ஏற்கனவே உள்ள பொறியியல் முதுநிலை பட்டப்படிப்புகளோடு ஒவ்வொரு மண்டலத்திலும் நான்கு இளநிலை படிப்புகளை ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் 60 மாணவர் சேர்க்கை என்ற வீதத்தில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளேன்.
எனவே, இந்த ஆண்டுக்கான (2018-19) பொறியியல் மாணவர் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டலத்திற்கும் 4 பாடப்பிரிவுகளில் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
இதன் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை, எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், குறைந்த கட்டணத்தில் தரமான தொழிற்கல்வியை பெறுவார்கள் என்பது மகிழ்ச்சி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story