முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி பேச்சு


முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 20 May 2018 11:30 PM GMT (Updated: 20 May 2018 8:44 PM GMT)

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நிலக்கோட்டை,

கோடை விழா மலர் கண்காட்சியை தொடங்கிவைப்பதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு வந்தார். நேற்று அவர் பெரும்பாறை, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர் வழியாக மதுரைக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக வத்தலக்குண்டு, நிலக்கோட்டையில் அவருக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகிறது. இந்த 15 மாதங்களில் எத்தனை பிரச்சினைகள், எவ்வளவு போராட்டங்களை நாங்கள் சந்தித்தோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். அத்தனை பிரச்சினைகளையும் சமாளித்து இன்றைக்கு சிறந்த அரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்போம் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று வியந்து பாராட்டக்கூடிய அளவுக்கு எங்கள் செயல்பாடு உள்ளது. கழகத்தை உடைக்கவேண்டும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற பல்வேறு கட்சிகளின் எதிர்பார்ப்பு பகல் கனவாகிவிட்டது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களுக்காக என்னென்ன திட்டங்களை தீட்டினாரோ அந்த திட்டங்களை ஒவ்வொன்றாக தற்போதைய அரசு நிறைவேற்றி வருகிறது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம் இந்திய அளவில் கல்விப்புரட்சியை ஏற்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

அதுமட்டுமின்றி ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக முழுமூச்சுடன் பாடுபடுகின்ற அரசாகவும் அ.தி.மு.க. அரசு உள்ளது. இதேபோல் விவசாயிகளுக்கு தேவையான அத்தனை உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீரை சேமிக்க குடிமராமத்து என்ற திட்டத்தை தொடங்கி, அந்தந்த பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களில் இருக்கின்ற வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் அள்ளி, அவர்களுடைய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை அ.தி.மு.க. அரசு உருவாக்கி உள்ளது.

பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாக கடலிலே கலக்கின்றது. இவ்வாறு வீணாகும் நீரை சேமிப்பதற்காக தடுப்பணைகளை கட்ட மூன்றாண்டு கால திட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில், இந்த ஆண்டு ரூ.350 கோடி, முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஓடைகள், நதிகளின் குறுக்கே எங்கெங்கெல்லாம் மழைநீர் வீணாக கடலில் கலக்கின்றதோ, அங்கெல்லாம் தடுப்பணைகள் அமைக்கப்படும்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இந்த அளவை 152 அடியாக உயர்த்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தும் பணியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதைத்தவிர விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர் வழங்கப்படுகிறது. பண்ணைக் குட்டைகள் அமைத்து கொடுக்கப்படுகிறது. தென்னை மரங்களில் இருந்து நீராபானம் உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான அனைத்து உதவிகளும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் உணவு தானிய உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்து ‘க்ரிஷ் கர்மாண்’ என்ற விருதையும் பெற்றிருக்கிறது. வேளாண்மை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் முதன்மை துறையாக தமிழகம் விளங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story