கர்நாடக முடிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி ரஜினிகாந்த் பேட்டி


கர்நாடக முடிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி ரஜினிகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 21 May 2018 12:15 AM GMT (Updated: 20 May 2018 10:01 PM GMT)

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதற்கு தயாராகி வருகிறார். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசி வருகிறார்.

சென்னை,

அந்த வரிசையில், நேற்று ரஜினி மக்கள் மன்றத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மகளிர் அணி செயலாளர்களை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை முடிந்த பின்னர், ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. ரஜினி மக்கள் மன்றத்துக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இதை பார்க்கும்போது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. பெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம். ஒவ்வொரு இடத்திலும் பெண்கள் கொடுக்கும் உற்சாகம், மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.

எந்த நாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்களோ அந்த நாடு முன்னேற்றம் பெற்று இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நிச்சயமாக, ரஜினி மக்கள் மன்றத்திலும் சரி, நான் புதிதாக தொடங்கும் கட்சியிலும் பெண்களுக்கு அதிகபட்ச முன்னுரிமை இருக்கும். அவர்களை எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்திக் கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?

பதில்: அது எங்களுக்குள் பேசியது. அதை வெளியில் சொல்ல முடியாது.

கேள்வி: உங்களுக்கு 150 தொகுதிகளில் ஆதரவு இருப்பதாக உளவுத்துறை ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: அந்த செய்தி உண்மையாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி.

கேள்வி: ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்வைப்பதால், அவருடன் கூட்டணி வைப்பது குறித்து நான் யோசிக்க வேண்டி இருக்கிறது என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறாரே?

பதில்: இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் என்ன கூட்டணி?

கேள்வி: கர்நாடக தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: நமது அரசியல் அமைப்பு சட்டப்படி சட்டமன்றத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். அதை நிரூபிக்க போகிறார்கள். இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்.

கேள்வி: எடியூரப்பா பதவி விலகியதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: கவர்னர் அவருக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து. அப்படி அவர்கள் செய்து இருக்கக் கூடாது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. அதற்கு எனது வணக்கங்கள்.

கேள்வி: காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளமும் ஆட்சி அமைக்கிறார்கள். இந்தநிலையில் காவிரி விவகாரத்தில் எப்படிப்பட்ட தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:- சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு கொடுத்தார்களோ அதை நிறைவேற்றியே ஆகவேண்டும். அது அவர்களது கடமை.

கேள்வி:- இந்த ஆணையம் முழுமையான உரிமைகள் கொண்டதாக இருக்குமா?

பதில்:- சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அடிப்படையில் ஆணையம் அமைக்கப்பட இருக்கிறது. காவிரி நீர் பங்கீட்டில் அணைகளின் முழு கட்டுப்பாடும் ஆணையத்திடமே இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. கர்நாடக அரசின் பொறுப்பில் ஆணையம் செயல்பட்டால் அது நல்லதல்ல.

ஆணையத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிகம் இருப்பார்கள். அரசியல் தலையீடும் நிச்சயம் இருக்கும். எனவே இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை போகத் போகத்தான் பார்க்க முடியும்.

கேள்வி:- கமல்ஹாசன் நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் நீங்கள் பங்கேற்றிருந்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- அனைத்துக் கட்சி கூட்டம் என்று கூறினார்கள். நான் கட்சியே இன்னும் ஆரம்பிக்கவில்லை. அவரது முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையவேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இன்னும் போகப் போக நிறைய விஷயங்களும், சம்பவங்களும் உள்ளன. மக்கள் நலனுக்காக அதில் கலந்து கொள்ளலாம்.

கேள்வி: இலங்கை தமிழர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் நடத்த மெரினாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: சில காரணங்களுக்காக மெரினாவில் தடை விதித்து இருக்கிறார்கள். காரணம் இல்லாமல் தடை விதிக்க மாட்டார்கள்.

கேள்வி:- தொடர்ந்து ஒவ்வொரு அமைப்பு நிர்வாகிகளிடமும் பேசி வருகிறீர்கள். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை அறிவிக்க திட்டமா?

பதில்:- அப்படியான திட்டங்கள் என்றும் கூடச் சொல்லலாம். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படட்டும். அப்போது முடிவு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அனைத்துக்கும் தயாராகவே இருப்போம். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Next Story