குடிமைப் பணி தேர்வு முறை மாற்றங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும் மாநில அரசுகளுக்கு வைகோ வேண்டுகோள்


குடிமைப் பணி தேர்வு முறை மாற்றங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும் மாநில அரசுகளுக்கு வைகோ வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 May 2018 2:00 AM IST (Updated: 22 May 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

குடிமைப் பணிகள் தேர்வு முறையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

குடிமைப் பணிகள் தேர்வு முறையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

 மத்திய அரசு, குடிமைப் பணிகள் தேர்வு பணி ஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டுவர முனைந்துள்ளது.

 மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றதும் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் 100 நாள் பயிற்சியின்போது வழங்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தான் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தரவரிசை அடிப்படையில் இனி பணிகள் ஒதுக்கப்படமாட்டாது. இது ஒரு வகையான தரப்படுத்துதல் முயற்சியாகும்.

தாய்மொழியில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று வரும் சாதாரண கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட பின்தங்கிய, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களை இந்தியக் குடிமைப் பணிகளில் நுழையவிடாமல் தடுக்கும் சதித் திட்டமாகும். சமூக நீதிக்கு எதிரான மோடி அரசின் இதுபோன்ற செயல்பாடுகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

மோடி அரசின் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகள் இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு வேட்டு வைத்துவிடும் என்பதை உணர்ந்துகொண்டு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் குடிமைப் பணிகள் தேர்வு முறையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன் 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட பல்வேறு அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்க நடைமுறையில் நடத்தப்பட்டு வந்த தேர்வு முறையில் புதிய விதிமுறையைத் திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விதிமுறையால் கிராமப்புறம், நகர்ப்புறம் என தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, அகில இந்திய அரசுப் பணிகளுக்கு ஏற்கனவே மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் – யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமி‌ஷன் நடத்தும் தேர்வு முறையை தொடரவும், புதிய விதிமுறையைத் தவிர்க்கவும் மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story