கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு


கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
x
தினத்தந்தி 21 May 2018 11:15 PM GMT (Updated: 21 May 2018 8:05 PM GMT)

திருவாரூரில் ஜூன் 1–ந்தேதி நடைபெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் என்று கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். #MKStalin

சென்னை, 

திருவாரூரில் ஜூன் 1–ந்தேதி நடைபெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் என்று கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95–வது பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் வடிவில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அசைவுகள் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால் அவரின்றி எதுவும் அசைவதில்லை. அரை நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில், இந்தியாவில் வேறெந்தத் தலைவருக்கும் இல்லாத அருமை பெருமைகளைக் கொண்டவர் நம் தலைவர் கருணாநிதி. எப்போதெல்லாம் மாநிலத்திலும், மத்தியிலும் அரசியல் நெருக்கடிகள் நேர்கின்றனவோ அப்போதெல்லாம் தலைவர் கருணாநிதி வகுத்தளிக்கும் வியூகங்களே தீர்வுகளாகும் வரலாற்றை தமிழ்நாடும், இந்தியாவும் பதிவு செய்துள்ளன.

காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க காரணமாக இருந்தவர் தலைவர் கருணாநிதி. அதன் இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் பெற்றுத் தந்தவர் தலைவர் கருணாநிதி. வறட்சி காலங்களிலும் கர்நாடக அரசுடன் நல்லுறவு காட்டி, நயமான பேச்சுவார்த்தை நடத்தி, மேட்டூர் அணையைத் திறப்பதற்கும், காவிரி கழனி செழிப்பதற்கும் வகை செய்தவர் தலைவர் கருணாநிதி. விவசாயிகளின் பட்டினி சாவையும் தற்கொலையையும் தடுப்பதற்காக இலவச மின்சாரத் திட்டம், விவசாயக் கூட்டுறவுக் கடன் ரத்து, உழவர் சந்தை என இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைக் கொண்டு வந்தவர் கருணாநிதி.

தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த முதல்–அமைச்சர் அதிகமான திட்டங்களை தமிழ்நாட்டுக்குத் தந்து இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த தலைவர் என்ற பெருமை கொண்ட தலைவர் கருணாநிதியின் 95–வது பிறந்தநாள் என்பது, காலண்டரில் கிழித்தெறியும் சாதாரண நாள் அல்ல. காலம் தன் வரலாற்றுப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாதனைச் சரித்திர நாள். நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் 95 வயது தலைவருக்கு, பொதுவாழ்வு வயது 81, திரையுலக வயது 71, கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றதில் இருந்து அரை நூற்றாண்டு, 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் அவரை அச்சாணியாகக் கொண்டே சுழல்கிறது.

ஜூன் 3–ல் தொடங்கி மாதம் முழுவதும் தமிழகம் எங்கும் தலைவர் கருணாநிதியின் 95–வது பிறந்தநாளை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம். அதற்கு கட்டியங்கூறும் வகையில் கட்சியுடன் இணைந்து மக்கள் நலனுக்காகக் களம்காணும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும், தலைவர் கருணாநிதி வளர்ந்த, அவரை வார்த்தெடுத்த தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தலைவரை வெற்றி பெறச்செய்த திருவாரூர் தொகுதியில் ஜூன் 1–ந்தேதி அன்று, அண்ணா திடலில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வாழ்த்துரை ஆற்றுகின்றனர். நீண்ட நெடுங்காலமாக தலைவர் கருணாநிதியின் தோளோடு தோள் நின்று துணைபுரியும் அவரது அரசியல் தோழரான கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையேற்க, தலைவரின் சொந்த மண்ணாகிய திருவாரூரில் அவரது மைந்தன் என்ற பெருமையுடனும் அவரது இயக்க உடன்பிறப்பு என்ற தகுதியுடன் நானும் பங்கேற்கிறேன்.

தமிழ்நாடும், இந்தியாவும் இன்றைய சூழலில் எதிர்பார்க்கும் மூத்த தலைவரான நம் தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஓய்வில் இருந்தாலும், அவரது சிந்தனைகளை முறையாகச் செயல்படுத்த அவரது வழிகாட்டுதலில் மகிழ்வுடன் களம்காண கட்சியின் ஒரு கோடிக்கும் அதிகமான அவரது தொண்டர்கள் அனைவரும் அணி திரள்வோம்.

நாடெங்கும், வீடெங்கும் தலைவர் கருணாநிதியின் 95–வது பிறந்தநாளைக் கொண்டாடுவோம். அந்த சரித்திர நாயகரின் சாதனைகளை எட்டுத்திக்கும் எடுத்துச்சென்று ஒவ்வொரு நெஞ்சத்திலும் பதிவு செய்வோம். தலைவர் கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் காணப்போகும் அவரது நூற்றாண்டு விழாவுக்கு முன்னோட்டமாக அமையட்டும் இந்த 95–வது பிறந்தநாள். இந்தியாவுக்கே வழிகாட்டும் தலைவர் கருணாநிதி, நமக்கு சொந்தமான தலைவர் என்பது நாம்பெற்றிருக்கும் தனித்தகுதி அல்லவா.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story