நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5-ந் தேதி கரூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் நீதிபதி உத்தரவு


நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5-ந் தேதி கரூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 22 May 2018 3:15 AM IST (Updated: 22 May 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் ஜூலை மாதம் 5-ந் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கரூர், 

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் ஜூலை மாதம் 5-ந் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேட்டியளித்தபோது, பெண் நிருபர் ஒருவரது கன்னத்தை தட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தன் செயலுக்காக கவர்னர் மன்னிப்பு கேட்டார். இதனை சுட்டிக்காட்டிய பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் சமூக வலைதளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இது சம்பந்தமாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து எஸ்.வி. சேகரை போலீசார் கைது செய்யக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

இதன் முதல்கட்ட விசாரணை கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அப்போது சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதி நடிகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

Next Story