மனைவியை கொன்று உடலை தார்ப்பாயில் கட்டி ஊருக்கு கொண்டு சென்றவர்


மனைவியை கொன்று உடலை தார்ப்பாயில் கட்டி ஊருக்கு கொண்டு சென்றவர்
x
தினத்தந்தி 22 May 2018 3:45 AM IST (Updated: 22 May 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் மனைவியை கொன்று உடலை தார்ப்பாயில் கட்டி சரக்கு வாகனத்தில் ஊருக்கு கொண்டுசென்றவர், உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடியபோது சிக்கினார்.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 27). இவரது மனைவி கவுசல்யா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முத்துராஜ் ஊர் ஊராக சென்று ஊசி, பாசி வியாபாரம் செய்துவருகிறார். அவர் நாகர்கோவிலுக்கு வியாபாரத்துக்காக குடும்பத்துடன் சென்று வடசேரி பஸ்நிலைய பகுதியில் தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு குழந்தைகள் தூங்கிய பிறகு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த முத்துராஜ், அங்கு கிடந்த இரும்பு கம்பியால் கவுசல்யாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

கவுசல்யாவின் உடலை ஊருக்கு கொண்டுசென்று அடக்கம் செய்ய அவர் முடிவு செய்தார். இதற்காக தார்ப்பாயில் மனைவியின் உடலை கட்டினார். ஒரு சரக்கு வாகனத்தை வாடகைக்கு பேசி தன்னிடம் இருந்த பொருட்களையும், அதனுடன் தார்ப்பாயில் கட்டிவைத்திருந்த மனைவியின் உடலையும் வாகனத்தில் ஏற்றினார். குழந்தைகளையும் ஏற்றிக்கொண்டு வள்ளியூருக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு வாகனத்தில் இருந்து மற்ற பொருட்களுடன் மனைவியின் உடலையும் இறக்கி வீட்டுக்குள் கொண்டு சென்றார். சிறிது நேரத்தில் சத்தம்போட்டு கதறி அழுதார். இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முத்துராஜ் வீட்டுக்கு ஓடிவந்தனர். அப்போது தனது மனைவிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறினார்.

அப்போது கவுசல்யாவின் தலை, முகத்தில் ரத்தக்காயம் இருந்ததை பார்த்து அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, சரியாக பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் முத்துராஜை மின்கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர். தாக்குதலை சமாளிக்க முடியாத அவர், கவுசல்யாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி அவர்கள் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து முத்துராஜிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது, மனைவிக்கும், தனக்கும் தகராறு ஏற்பட்டபோது மதுபோதையில் இருந்த நான், இரும்பு கம்பியால் மனைவியை அடித்தேன். இதில் அவர் இறந்துவிட்டார். கொலையை மறைப்பதற்காக தார்ப்பாயில் உடலை கட்டி சரக்கு வாகனத்தில் ஏற்றி ஊருக்கு கொண்டுவந்தேன். அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக கூறி நாடகமாடியதை பொதுமக்கள் கண்டுபிடித்துவிட்டனர் என்று போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து போலீசார் முத்துராஜை கைது செய்து வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீஸ் காவலுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story