ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை: அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாரின் கார் டிரைவர் கைது பரபரப்பு வாக்குமூலம்


ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை: அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாரின் கார் டிரைவர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 22 May 2018 3:30 AM IST (Updated: 22 May 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாரின் கார் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை, 

கோவை ராமநாதபுரம், ராமலிங்கஜோதி நகரை சேர்ந்தவர் சிவகுமார், சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 35). ஜெயந்தி அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டுவேலைகள் செய்துவந்தார். கடந்த 17-ந் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயந்தி திடீரென்று மாயமானார்.

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து சிவகுமார் ராம நாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் உள்ள சாக்கடையில் சாக்குமூட்டைக்குள் ஒரு பிணம் கிடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் காணாமல்போன ஜெயந்தி என்பது தெரிந்தது.

போலீசார் ஜெயந்தி வீட்டில் இருந்த செல்போனை ஆய்வு செய்ததில், அதே பகுதியை சேர்ந்த மணிவேல் (34) என்பவர் கடைசியாக பேசியது தெரியவந்தது. உடனே போலீசார் மணிவேலை பிடித்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது அவர், ஜெயந்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் மணிவேலை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் ஜெயந்தியை கொலை செய்தது குறித்து அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:-

மணிவேலின் சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள எத்தரைபாளையம். இவர் ராமநாதபுரம் ராமலிங்கஜோதி நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். என்.என்.வி. கார்டனில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை செய்துவந்தார்.

தற்போது சுந்தரம் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் வீட்டை மணிவேல் கவனித்து வந்தார். அப்போது அவர் ஜெயந்தியிடம் தொடர்புகொண்டு, வீட்டை சுத்தம் செய்ய வருமாறு கூறினார். அதன்படி அவர் கடந்த 17-ந் தேதி மாலையில் அங்கு சென்று வீட்டை சுத்தம் செய்தார். அப்போது மணிவேல், ஜெயந்தியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி அவரை கடுமையாக திட்டினார். தனது ஆசைக்கு இணங்க அவர் மறுத்ததால், மணிவேலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர் ஜெயந்தியை பிடித்து கீழே தள்ளியதில் மயக்கம் அடைந்தார். பின்னர் ஜெயந்தி கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

கொலையை மறைக்கவும், தன்மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ஜெயந்தி அணிந்திருந்த 4 பவுன் நகையை திருடிக் கொண்டார். பின்னர் பிணத்தை சாக்குமூட்டைக் குள் வைத்து கட்டி சாக்கடையில் வீசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் ஜெயந்தியிடம் செல்போனில் பேசியதால் சிக்கிக்கொண்டார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலையை மணிவேல் மட்டும்தான் செய்தாரா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story