ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு, பலர் காயம்


ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு, பலர் காயம்
x
தினத்தந்தி 22 May 2018 7:17 PM IST (Updated: 22 May 2018 7:35 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. #SterliteProtest


தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கிராம மக்கள் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது. இதையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தை தொடங்கினர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது. 

 எனவே சட்டம்- ஒழுங்கினை பராமரித்திட நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை (புதன்கிழமை) காலை 8 மணிவரை குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையம் மற்றும் சிப்காட் போலீஸ் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடியில் காலை 9 மணி முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பனிமய மாதா ஆலயம் அருகே திரண்ட போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால், ஆங்காங்கே போலீசார் அவர்களை வழிமறித்தனர். இருந்தபோதும், போலீசார் வைத்து இருந்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர்.

 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருப்பதால் அனைவரும் கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர்.

 இதனால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் இரும்பு தடுப்புகளை தள்ளிக் கொண்டு முன்னேறிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. உடனடியாக போலீசார் தடியடி நடத்தினார்கள்.  கூட்டம் அதிகமானதால் போலீசாரால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் கற்களை வீசியதால் போலீசார் பின்நோக்கி ஓடினார்கள். சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த போலீசாரின் இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் இந்த போராட்டம் பயங்கர கலவரமாக மாறியது. 

போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நுழைய முயன்றனர். கலெக்டர் அலுவலக வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது, அவர்களுக்குள் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இதில் சிதறி ஓடிய போராட்டக்காரர்கள் ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகுந்தனர். அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கலெக்டர் அலுவலக வாகனங்கள் தாக்கப்பட்டது. அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

துப்பாக்கி சூட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி வெனிஸ்டா உள்பட 9 பேர் பலியாகினர். உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி கலவரத்தில், 11 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது, இந்த இக்கட்டான சூழலில் அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும் என ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார். 

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி, பெருந்திரளான நபர்கள் மாவட்ட கலெக்டரால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் மீறி ஊர்வலமாகச் சென்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முற்றுகையிட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தடை உத்தரவையும் மீறி, காவலர்களின் அறிவுரையையும் புறக்கணித்து, காவலர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், காவல் துறையினரின் வாகனங்களை தீயிட்டும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், கலெக்டர் அலுவலகத்தையும் கல் வீசி தாக்கியும் சேதப்படுத்தியுள்ளனர். 

இவர்கள் தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டும், பொது மக்கள் உயிருக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த காரணத்தினால், பொது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பொருட்டும், பொதுத் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்க்கும் பொருட்டும், முற்றுகையாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. இந்நிகழ்வில், துரதிருஷ்டவசமாக 9 நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story