ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட அனைத்துக் கட்சி தலைவர்கள் வற்புறுத்தல்


ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட அனைத்துக் கட்சி தலைவர்கள் வற்புறுத்தல்
x
தினத்தந்தி 22 May 2018 10:30 PM GMT (Updated: 22 May 2018 8:58 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்த அனைத்துக் கட்சி தலைவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான மணிராஜ், அந்தோணி செல்வராஜ், தமிழரசன்.

சென்னை,

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றைய போராட்டத்தில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராடக்காரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். ஒரு நல்ல நோக்கத்திற்காக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதற்கு அரசின் அணுகுமுறையே காரணம் ஆகும். தூத்துக்குடியில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிகழ்வுகள் துரதிருஷ்டவசமானவை. இவற்றுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்தி, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும் தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர். ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு துப்பாக்கி சூடு மூலம் தீர்வுகாண முடியாது. இது ஜனநாயக விரோதச் செயலாகும். போராட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவும், பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதியின் மூலம் உரிய நீதி விசாரணையை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷ் ராணுவம் உயிர்களை வேட்டையாடியதைப் போல தமிழக காவல்துறையும் மனித உயிர்களைப் பலிவாங்கி உள்ளது. உயிர்ப்பலி வாங்கிய துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட வேண்டும்.

தமிழக அரசு ஏவிய காவல்துறையின் பாசிச அடக்கு முறையை எதிர்த்து நீதி கேட்டு அறப்போராட்டம் இன்னும் வீறுகொண்டு எழும் என்பதையும், மக்கள் உரிமைக் கிளர்ச்சியை நசுக்க முடியாது என்பதையும் திட்டவட்ட மாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக பொதுமக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு இப்பிரச்சினைக்கு நல்ல முடிவு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த். பொதுமக்களுக்கு பாதிப்பு என்று தெரிந்தும் அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசும், மத்திய அரசும் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர்க்காமல் தமிழக அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுவதும், காலம் தாழ்த்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ஆளும் அ.தி.மு.க. அரசும், மத்திய அரசும் இதில் முழுக்கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்துத் தவறுகளுக்கும் காரணம். இதில், குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால் இப்பொழுது அரசின் ஆணையினால். அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
தூத்துக்குடியில் போராடுகிற மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாறாக, ஆலை முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் போராடியவர்களை காவல்துறையினர் பெண்கள், குழந்தைகள் அனைவரின் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி ஓட, ஓட விரட்டியடித்துள்ளனர். கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியதோடு மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சூட்டில் சிலர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமுற்றுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன். பொதுமக்களுக்கு பெருந்தீங்கு விளைவித்து வருகிற ஆலையை இயக்க அனுமதி அளித்து பாதுகாப்பும் தந்து கொண்டிருக்கிற மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, ஆலையை நிரந்தரமாக மூடிவிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வற்புறுத்துகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். ஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, மக்கள் நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார். பல்லாயிரக்கணக்கில் திரளும் மக்கள் பல லட்சக்கணக் கில் திரள்வதற்கு முன்பாக அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசின் சார்பில் வழங்கிட வேண்டும். உயிர்களை துப்பாக்கி சூட்டில் பறித்த எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

சமத்துவ மக்கத்தின் நிறுவனத் தலைவர் ஏ.நாராயணன். பொதுமக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கொந்தளிக்கும் மனநிலையில் உள்ள தூத்துக்குடி மக்களின் இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை இந்த அரசு நிரந்தரமாக மூடுவதுதான். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை மக்கள் சக்தியே பெரியது என்பதை உணர்த்தும் வகையில் உண்ணா விரதப் போராட்டம் நடை பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எந்த மக்கள் போராட்டத்திற்கு தீர்வுகாண முடியாத தமிழக அரசு தனது அதிகாரத்தின் மூலமாக இவ்வாறு மக்கள் மீது வன்முறையை காட்டுவது காட்டுமிராண்டித்தனமானது. சகித்துக்கொள்ள முடியாது. தமிழக அரசின் சர்வாதிகார இந்த நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில பொதுச் செயலாளர் ஆ.ஹாலித் முகமது, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆ.மணியரசன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Next Story