துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்டது யார்? கமல்ஹாசன் கேள்வி


துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்டது யார்? கமல்ஹாசன் கேள்வி
x
தினத்தந்தி 23 May 2018 5:15 AM IST (Updated: 23 May 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்டது யார்? என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தூத்துக்குடியில் நடந்து இருக்கும் சம்பவம் சோகத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு விஷயம். மக்கள் அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்த நிலையில், தங்களின் திண்ணமான எண்ணம் ஆலையை மூடுவது தான் என்று மக்கள் தெரிவித்தும், தொடர்ந்து மக்கள் வாழும் பகுதிகளை மாசுபடுத்திக்கொண்டு இருக்கும் ஆலைக்கு சாதகமாக சட்டத்தை ஏவுவது என்பது பொறுக்க முடியாத ஒன்று. வணிக வெற்றிக்காக மனித உயிர்கள் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணம் கண்டிக்கத்தக்கது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பல்வேறு வயதுடையவர்கள் கிட்டத்தட்ட 10 பேர் இறந்து இருக்கிறார்கள். அதில் வெனிஷ்டா என்ற ஒரு பெண் தன்னுடைய பள்ளி பரீட்சை முடிவுக்காக காத்துக்கொண்டிருந்தவர். இந்த சோகத்தை, இந்த துரோகத்தை தமிழகம் மறக்காது. வன்முறை என்ற ஒரு காரணத்தை கூறி நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினோம் என்று சொல்லப்போகிறார்கள்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தலாம் என்று ஆணை பிறப்பித்தவர்கள் யார்? பேச்சுவார்த்தைகளுக்கு போகாமல் போராட்டத்தை துப்பாக்கிச்சூடு வரை கொண்டுபோகலாம் என்று அனுமதி அளித்தது யார்? என்பது எங்கள் கேள்வி மட்டும் அல்ல, தமிழகத்தின் கேள்வி. இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். யாராவது ஒரு அதிகாரியை பதவி நீக்கம் செய்வது மட்டும் போதாது.

மேலிடத்தில் இருந்து உத்தரவு வராமல் இத்தகைய பெரிய சம்பவம் நிகழ வாய்ப்பு இல்லை. இந்த மாதிரியான அரசு வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது. ஆலையை மூட வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டும், மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது மட்டும் போதாது. அரசும் அமைதி காக்க வேண்டும். இந்த நிலை வரக்கூடாதே என்பதற்காகத்தான் நான் அமைதியை நோக்கி பேசிக்கொண்டே இருக்கிறேன்.

நீங்கள் ஏன் போராடவில்லை? என்று கேட்கிறார்கள். போராட்டம் என்பது இதுபோன்று ரத்தத்தில் முடியும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான். பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி ரத்தத்தில் வைக்கக்கூடாது. நாம் புத்தியை உபயோகப்படுத்தி சுதந்திரத்தையே வாங்கியவர்கள். எனவே, போராட்டம், போராட்டம் என்று மக்களை கொல்வதில் அர்த்தமில்லை. உரையாடலில் முடிய வேண்டிய ஒரு விஷயத்தை துப்பாக்கிச்சூட்டில் தான் முடிப்பது என்பது வீரம் என்று நினைப்பது விவேகம் அல்ல.

மிக சுலபமாக காலையில் ஆலை வாசலில் ஒரு பூட்டு போட்டிருந்தாலே போதும். ஆனால் இது ஏதோ அரசை கவிழ்க்கும் ஆர்ப்பாட்டமாக நினைத்துக்கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தான் எங்களுக்கு வியப்பாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. மக்கள் கேட்பதை தராமல் இருப்பதனால் தான் இப்படிப்பட்ட போராட்டங்கள் எல்லாம் வெடிக்கின்றன.

மக்களுக்கு எவை தேவை என்பதை எல்லாம் கொடுத்து இருந்தார்களே ஆனால், இந்த போராட்டமே வெடித்து இருக்காது. தமிழகம் இன்று இந்த நிலையில் இருந்திருக்காது. இவ்வாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

Next Story