தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. #SterliteProtest #Thoothukudi
சென்னை,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று நடைபெற்ற கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது. அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை சரியாக கையாள தவறிய ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை தமிழக அரசு இடமாற்றம் செய்து உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை (வடக்கு) போக்குவரத்து காவல் ஆணையர் சண்முகப்பிரியா நீலகிரி எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தலைமைச்செயலாளர், டிஜிபி மற்றும் அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில் இடமாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story