தமிழகத்தில் எதிர்க்கட்சி இருக்கிறதா என்பதே தெரியவில்லை டி.ராஜேந்தர் பேட்டி


தமிழகத்தில் எதிர்க்கட்சி இருக்கிறதா என்பதே தெரியவில்லை டி.ராஜேந்தர் பேட்டி
x
தினத்தந்தி 23 May 2018 11:06 PM IST (Updated: 23 May 2018 11:06 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய நியாயமான போராட்டத்தில் தமிழக அரசு நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் கொடுமையானது. #Thoothukudi #SterliteProtest

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய நியாயமான போராட்டத்தில் தமிழக அரசு நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் கொடுமையானது. மத்திய அரசோடு, மாநில அரசு சேர்ந்து நடத்தும் கூட்டாட்சிதான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி ஒரு காட்டாட்சியாகும். வெள்ளைக்காரன் காலத்தில் கூட இந்த மாதிரியான துப்பாக்கி சூடு நடந்தது இல்லை.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மத்திய அரசால் ஆட்டிவைக்கப்படும் பொம்மை ஆட்சியாகும். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டார் என்று கூறும் இவர்கள், ஆலையை இழுத்து மூட வேண்டியதுதானே. ஏன் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் எதிர்க்கட்சி இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் கூட்டுவைத்துள்ளதாக எண்ண தோன்றுகிறது. அரசியல்வாதிகள் நடிகர்களை தாண்டி நடிக்கிறார்கள். ஆனால் நடிகர்கள் அரசியல்வாதிகளை தாண்டி நடிக்கிறார்கள். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story