துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் வைகோ வலியுறுத்தல்
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் படுகாயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று காலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22 வருடங்களாக மக்கள் சார்பில் எவ்வளவோ போராட்டங்கள் நடந்து உள்ளன. ஆனால் இதுவரை எந்தவித வன்முறையிலும் நாங்கள் ஈடுபடவில்லை. அ.குமரெட்டியபுரம் போன்ற ஊர்களில் நடந்த போராட்டம் கூட அமைதியான போராட்டம்தான்.
ஆனால், தூத்துக்குடியை வன்முறை களமாக்கி பல பேரை சுட்டுக்கொன்றால் தான் இந்த ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்க முடியும் என்ற நோக்கத்தில் துப்பாக்கி சூடு நடந்து உள்ளது. இதற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் அனைவரும் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இந்த ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக ஒழிக்கப்பட வேண்டும். அகற்றப்பட வேண்டும்.
போலீஸ் யாருக்காக உள்ளனர். தனிப்பட்ட முதலாளிக்காக இருக்கிறார்களா? முதலாளிக்காக போலீஸ் வந்து உள்ளது. ஆனால் மக்களுக்காக போலீஸ் வரவில்லை என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள். இதுதான் இன்று இருக்கும் நிலைமை. இதற்கு நாங்கள் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம். ஆயுதம் இல்லாமல் வந்த நிராயுதபாணியான பொதுமக்களை வேன் மீது இருந்தும், பெரிய கட்டிடங்களில் பதுங்கி இருந்தும் போலீசார் சுட்டுக்கொன்று உள்ளனர். இதற்கு மன்னிப்பு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story