சேனல்களுக்கு கட்டணம் நிர்ணயம்: “டிராய் கொண்டுவந்த விதிகள் செல்லும்” ஐகோர்ட்டு 3-வது நீதிபதி தீர்ப்பு


சேனல்களுக்கு கட்டணம் நிர்ணயம்: “டிராய் கொண்டுவந்த விதிகள் செல்லும்” ஐகோர்ட்டு 3-வது நீதிபதி தீர்ப்பு
x
தினத்தந்தி 24 May 2018 4:00 AM IST (Updated: 24 May 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

தனியார் சேனல்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்து டிராய் கொண்டு வந்த விதிகள் செல்லும் என தலைமை நீதிபதியின் தீர்ப்பை 3-வது நீதிபதி உறுதி செய்தார்.

சென்னை, 

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), பொதுமக்கள் விரும்பும் சேனல்களை குறைந்த கட்டணத்தில், அதாவது 100 இலவச சேனல்களை ரூ.130-க்கு வழங்க வேண்டும் என தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்காக எல்லா வினியோகஸ்தர்களும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்து, வரைவு விதிகளை டிராய் வெளியிட்டது.

அதன்பிறகு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஆண்டு மார்ச் 3-ந் தேதி புதிய விதிகளையும், கட்டணம் தொடர்பான விதிமுறைகளையும் டிராய் வெளியிட்டது.

இந்த புதிய விதிகளை எதிர்த்து ஸ்டார் இந்தியா நிறுவனமும், விஜய் டெலிவிஷன் நிறுவனமும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தன.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, டிராய் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தனியார் தொலைக்காட்சிகள் ஒளி பரப்பு செய்யும் அனைத்து சேனல்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கும், அதை ஒழுங்குபடுத்துவதற்கும் எல்லா உரிமையும் டிராய்க்கு உள்ளது’ என்று வாதிட்டார்.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் ப.சிதம்பரம், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி, ‘தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்? என்பதை நிர்ணயம் செய்யவும், இதுதொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்கவும் டிராய்க்கு அதிகாரம் இல்லை’ என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் வழங்கினர்.

‘பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் சேனல்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்து டிராய் கொண்டு வந்துள்ள விதிகள் செல்லும்’ என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு அளித்தார்.

ஆனால், அவ்வாறு விதிகளை உருவாக்க டிராய்க்கு அதிகாரம் இல்லை. விதிகளை உருவாக்கியது சட்டத்துக்கு புறம்பானது என்று நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு அளித்தார். இதனால், இந்த வழக்கு 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கை 3-வது நீதிபதியாக எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், ‘தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கான கட்டண விகிதங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் டிராய்க்கு உள்ளது. எனவே இதுதொடர்பாக டிராய் கொண்டு வந்துள்ள புதிய விதிகள் செல்லும். ஆகவே தலைமை நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்று, உறுதி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story