ஒரே மகனை இழந்து பரிதவிக்கும் குடும்பம் துப்பாக்கிசூட்டில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்


ஒரே மகனை இழந்து பரிதவிக்கும் குடும்பம் துப்பாக்கிசூட்டில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 24 May 2018 3:45 AM IST (Updated: 24 May 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குறித்த உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்றுமுன்தினம் நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியானார்கள். மேலும் திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவரும் இறந்தார். இந்தநிலையில் நேற்று தூத்துக்குடி அண்ணாநகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் குண்டுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

பலியானவர்களில் சிலர் குறித்த உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. அது பற்றிய விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 25). இவர் பயந்த சுபாவம் கொண்டவர். வீட்டிற்கு ஒரே பிள்ளை. சண்முகம் எந்தவித போராட்டத்திற்கும் செல்லமாட்டார். நேற்றுமுன்தினம் தனது வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது, டி.வி.யில் ஸ்டெர்லைட் சம்பந்தமாக போராட்டத்தில் மக்கள் திரளாக இருப்பதை பார்த்து தானும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக வீட்டில் கூறிச் சென்றார். அது தான் அவர் கலந்து கொண்ட முதல் மற்றும் கடைசி போராட்டம் ஆகும். அவர் கலந்து கொண்ட முதல் போராட்டத்திலேயே போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக இறந்து விட்டார். ஒரே மகனை இழந்து அவரது பெற்றோர் பரிதவித்து வருகிறார்கள்.

அழைப்பிதழ் கொடுக்க சென்று மரணத்தை தழுவியவர்

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வராஜ் (38). இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு அஜய் ஜோன் என்ற மகனும், அமிர்தா என்ற மகளும் உள்ளனர். அந்தோணி செல்வராஜ் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தனது மகளின் பூப்புனித நீராட்டு விழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இதற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேற்றுமுன்தினம் காலையில் அலுவலகத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு புறப்பட்டு வந்தார்.

கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது, அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து இறந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலை சரியாக பார்க்கக்கூட போலீசார் அனுமதிக்கவில்லை. ஆஸ்பத்திரிக்கு சென்றாலே போலீசார் விரட்டி அடிக்கிறார்கள். அழைப்பிதழை கொடுக்க சென்ற இடத்தில் அந்தோணி செல்வராஜ் இறந்ததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

வினிதா

தூத்துக்குடி அருகே உள்ள திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் வினிதா என்ற ஜான்சிராணி (37). இவரது கணவர் ஜேசுபாலன். இவர்களுக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

வினிதா துப்பாக்கி சூட்டில் பலியானது குறித்து அவரது உறவினர்கள் கூறியதாவது:-

வினிதா நேற்றுமுன்தினம் திரேஸ்புரம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த போலீசார், திரேஸ்புரம் பகுதி மக்களை தாக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது, வினிதா போலீசாரிடம் இருந்து ஏன் இப்படி எல்லோரையும் அடித்து துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரை அங்கு இருந்து சென்றுவிடும்படி எச்சரித்தனர். ஆனால் அவர் அங்கிருந்து செல்லவில்லை. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் வினிதா குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.

இது ஒரு திட்டமிட்ட படுகொலை. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவித்து விடுகிறோம். நீங்கள் உடலை பெற்றுக் கொள்ளுங்கள் என்று போலீசார் கூறினார்கள். ஆனால் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவாதம் தந்தால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என்று நாங்கள் தெரிவித்தோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருமணம் நிச்சயம் ஆனவர்

நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்த காளியப்பனின் சகோதரி வசந்தி கூறுகையில், “காளியப்பனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. டிரைவராக உள்ளார். நேற்று மதியம் வெளியூருக்கு செல்வதற்காக அவருடைய முதலாளி செல்போன் மூலம் அழைத்தார். அவர் அண்ணாநகர் பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது, போலீசார் அவரை சுட்டுவிட்டனர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

காளியப்பனுக்கும் கழுகுமலையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இன்னும் 2 மாதத்தில் அவருக்கு திருமணம் நடக்க இருந்தது. ஆனால் அதற்குள் அவரை போலீசார் சுட்டு கொன்று விட்டனர்” என்று கதறி அழுதபடி கூறினார்.

புதுமாப்பிள்ளை

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் தூத்துக்குடி தாமோதரநகரைச் சேர்ந்த மணிராஜூம் (வயது 25) ஒருவர்.

இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. புதுமாப்பிள்ளை மணிராஜ் இறந்த தகவல் அறிந்த அவரது இளம் மனைவி கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Next Story