கொலை வழக்கில் போலீஸ் சித்ரவதைக்கு உள்ளான 2 வாலிபர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம் உத்தரவு


கொலை வழக்கில் போலீஸ் சித்ரவதைக்கு உள்ளான 2 வாலிபர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 24 May 2018 3:30 AM IST (Updated: 24 May 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக பிடித்து செல்லப்பட்டு சித்ரவதைக்கு உள்ளான வாலிபர்கள் இருவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சட்டவிரோதமாக பிடித்து செல்லப்பட்டு சித்ரவதைக்கு உள்ளான வாலிபர்கள் இருவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில், ஆர்.ஜெய்சங்கர், ஆர்.பொன்முத்துராஜ் ஆகிய வாலிபர்கள் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள். அங்கு வசித்து வந்த எங்களுடைய சித்தி கலா, அவரது கணவர், 2 மகள்கள் ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு அடையாளம் தெரியாத கூலிப்படையினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் எங்கள் தாத்தா வழக்கு தொடர்ந்தார்.

இதன்படி. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், சி.பி.சி.ஐ.டி. போலீசாரால், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, சென்னையில் வேலை செய்த எங்களை போலீசார் பிடித்து சென்று, அடித்து உதைத்து, நாங்கள் தான் கொலை செய்தோம் என்று ஒப்புக்கொள்ள வைத்தனர். 15 நாட்களுக்கு மேலாக எங்களை சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்தனர். தண்ணீர், உணவு கூட தராமல் அடித்து உதைத்து கொடுமை செய்தனர். போலீசாரின் இந்த செயல் மனித உரிமை மீறிய செயலாகும்.

இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த புகாரை மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் விசாரித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உறுப்பினர் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

புகார் தாரர்கள் இருவரையும் சட்டவிரோதமாக பிடித்துச்சென்று, தங்களது கட்டுப்பாட்டில் வைத்து போலீசார் சித்ரவதை செய்துள்ளனர். இந்த செயல் மனித உரிமை மீறிய செயலாகும். எனவே, (அப்போதைய) விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் எஸ்.கந்தகுமார், பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஐரின் தங்கபாலா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி, போலீஸ்காரர்கள் சங்கிலிராஜா, அழகுபாண்டி ஆகியோர் மனித உரிமை மீறி செயல்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகி உள்ளது.

எனவே, புகார்தாரர்கள் இருவருக்கும் தலா ரூ.3 லட்சம் வீதம், ரூ.6 லட்சத்தை இழப்பீடாக 8 வாரத்துக்குள் தமிழக உள்துறை செயலாளர் வழங்க வேண்டும். இந்த தொகையை, இன்ஸ்பெக்டர் கந்தகுமார், பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஐரின் தங்கபாலா உள்ளிட்டோரின் சம்பளத்தில் இருந்து தமிழக அரசு பிடித்தம் செய்து கொள்ளலாம். இவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story