தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு; தமிழக அரசு நடவடிக்கை


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு; தமிழக அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 24 May 2018 8:52 AM IST (Updated: 24 May 2018 8:52 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரத்தினை துண்டித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் நேற்று ஒருவர் இறந்தார். மேலும் நேற்று நடந்த சம்பவத்தில் போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவரில் செல்வசேகர் என்பவர் இன்று  உயிரிழந்து உள்ளார்.  இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.

தூத்துக்குடியில் கலவரம் பரவிடாமல் தடுப்பதற்காக 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது.  தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவத்தினை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வந்தன.

இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் இன்று காலை 5.15 மணி முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.  தமிழக அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

Next Story