தூத்துக்குடியில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
தூத்துக்குடியில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணைய இணைப்புகளை மத்திய, மாநில அரசுகள் துண்டித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளால் தூத்துக்குடி மக்களின் கோபம் அதிகரித்திருக்கிறதே தவிர, சற்றும் குறையவில்லை.
இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய முடியாமலும், 11–ம் வகுப்புக்கு விண்ணப்பிக்க முடியாமலும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிலும் சேவைகள் பாதிக்கப்பட்டன. தென் மாவட்டங்களில் பல இடங்களில் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். சேவைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் இன்னொரு மோதல் நடந்தால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்பட்டு விடும். அதைத் தவிர்த்து அமைதியை ஏற்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.
இணைய சேவையை மீண்டும் வழங்க வேண்டும். தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப்பெற்று மக்கள் சுதந்திரமாகவும், இயல்பாகவும் நடமாட அனுமதிக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மக்களுக்கு ஆட்சியாளர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story