தூத்துக்குடி கலவரத்தின் பின்னணி துப்பாக்கிசூடு நடத்தியது ஏன் என்பதற்கும் முதல்-அமைச்சர் விளக்கம்
தூத்துக்குடி கலவரத்தின் பின்னணி குறித்தும், துப்பாக்கிசூடு நடத்தியது ஏன் என்பதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். #EdappadiPalaniswami #Thoothukudi #ThoothukudiShooting
சென்னை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து இருக்கிறது.
இந்தநிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலேயே 23.3.2013 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையிலே, 29.3.2013 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பை ஜெயலலிதா துண்டித்தார். அதன் உரிமத்தையும் அவர் ரத்து செய்தார்.
அதை எதிர்த்து அந்த நிர்வாகம் 31.5.2013 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றார்கள்.
8.8.2013 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் சில நிபந்தனைகளை விதித்து அந்த ஆலையை தொடக்கிக்கொள்ளலாம் என்று ஒரு தீர்ப்பை வழங்கியது. தேசிய பசுமை தீர்ப் பாயம் வழங்கிய அந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 2013-ம் ஆண்டில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். தற்போது அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
9.4.2018 அன்று, ஆலையை தொடர்ந்து இயக்குவதற்காக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் விண்ணப்பம் செய்தது. ஜெயலலிதாவின் அரசு அதை நிராகரித்து விட்டது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் தமிழக மின்சார வாரியம், ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு வழங்கக்கூடிய மின் இணைப்பை இன்று துண்டித்து விட்டது. ஆகவே இந்த அரசு மக்களுடைய உணர்வை மதித்து, ஆலையை மூட மேற்கொண்ட பணிகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
தற்போது வேண்டுமென்றே அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சில எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், சில இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
“தினத்தந்தி”யில் விரிவாக...
இந்த அரசு கடந்த 4, 5 மாதங்களாக கலெக்டர் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்களை அழைத்து 14 முறை கூட்டம் நடத்தி, அரசால் எடுத்த நடவடிக்கை விளக்கமாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், 14.4.2018 அன்று மாவட்ட கலெக்டர் அரசின் நிலைப்பாட்டை நாளிதழ்களில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக விளம்பரம் செய்திருக்கின்றார்.
அந்த விளம்பரம் அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. “தினத்தந்தி” பத்திரிகையில் விரிவாகவே செய்தியாகவும் போட்டிருக்கிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரைக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் புதுப்பிப்பதற்காக விண்ணப்பம் செய்தது. அது 9.4.2018 அன்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியும் நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியில்லாமல் ஆலையை இயக்க முடியாது. அந்தப் பகுதி மக்களுடைய உணர்வுகளை, அவர்களுடைய வேண்டுகோளை இந்த அரசு சட்டத்திற்கு உட்பட்டு நிறைவேற்றி வந்திருக்கிறது.
பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அப்படி நடத்துகிற போதெல்லாம் அமைதி காத்து, அறவழியிலே போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இந்த முறை சில எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின்பேரில், சில சமூக விரோதிகள் ஊடுருவி, அப்பாவி ஜனங்களை பயன்படுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலே இந்த போராட்டத்தை இன்றைக்கு ஒரு மோசமான சூழ்நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
உயிர் இழந்த அத்தனை பேரின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், மிகுந்த வேதனையும், துயரமும் நாங்கள் அடைந்துள்ளோம். மக்கள் என்னென்ன கோரிக்கை வைத்தார்களோ, அதையெல்லாம் அரசு சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல், 9.4.2018 அன்று மாசுக்கட்டுப்பாடு வாரியம் அந்த ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதி வேண்டுமென்று விண்ணப்பித்ததையும் நிராகரித்துள்ளது. அதற்கும், அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வழக்கில் அரசின் சார்பாக அரசின் கருத்தை வக்கீல்கள் எடுத்து வைத்து வாதிட்டார்கள். எனவே, மக்களுடைய உணர்வுக்கு மதிப்பளிக்கின்ற இந்த அரசு, ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கு உண்டான நடவடிக்கையை சட்டத்தின் வாயிலாக எடுத்து வருகிறது.
விரும்பத்தகாத சம்பவம்
அன்று நடைபெற்ற சம்பவம் ஒரு விரும்பத்தகாத சம்பவம். ஆகவே, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த தடை உத்தரவினால், ஒரு பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது.
விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் இந்த 144 தடை உத்தரவே போடப்பட்டது. ஆனால், சில விஷமிகளும், சில அரசியல் கட்சித்தலைவர்களும் சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பயன்படுத்தி அத்தகைய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று மிக வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- முதல்-அமைச்சரோ, துணை முதல்-அமைச்சரோ தூத்துக்குடிக்கு நேரில் செல்லவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறாரா?
பதில்:- அது தவறான குற்றச்சாட்டு. நேற்றையதினம்கூட ஸ்டாலின் போய் சந்தித்து வந்திருக்கிறார். அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும்.
அங்கே அமைதி நிலவ வேண்டும். இயல்புநிலை திரும்ப வேண்டும். பொதுமக்கள் அச்சமில்லாமல் வாழவேண்டும். பொதுச்சொத்துக்கு எவ்வித சேதமும் விளைவிக்கக்கூடாது என்பதற்காகத்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி:- துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அவசியம் என்ன? அதற்கான காரணம் என்ன?
பதில்:- நீங்களும், நாங்களும் இங்குதான் அன்று இருந்தோம். நான் அன்று ஆய்வுக் கூட்டத்திலே இருந்தேன். நீங்களெல்லாம், ஆய்வுக் கூட்டத்திற்கு வந்திருந்து, என்னை படம் பிடித்தீர்கள். நான் இங்கே இருக்கிறேன்.
ஆகவே, ஒவ்வொரு முறையும் போராட்டம் நடக்கிறபோது, அமைதியான முறையில்தான் நடத்தினார்கள். ஆனால், இந்த முறை அப்படியல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டு, சில அரசியல் கட்சித் தலைவர்கள், சில சமூகவிரோதிகள் ஊடுருவி, இதைப் பயன்படுத்தி, இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும், அவப்பெயரை உண்டாக்க வேண்டும், ஒரு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இந்த சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆகவே, ஊர்வலம் வந்தவர்கள் அங்கே இருக்கின்ற காவல் துறையினரை தாக்கிய பிறகு, முதலிலே கண்ணீர் புகையை வீசினார்கள், பிறகு தடியடி பிரயோகம் செய்தார்கள், பிறகு அதையும் மீறி அங்கே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கின்ற வாகனத்திற்கு தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையினுடைய ஊழியர் குடியிருப்புக்குள் புகுந்து அங்கே இருக்கிற வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு, அங்கே உள்ளே நுழைய முற்படுகிறார்கள். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முற்படுகிறார்கள். தொலைக்காட்சியில் இதெல்லாம் காட்டப்பட்டது.
கேள்வி:- ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை?
பதில்:- இப்படியெல்லாம் ஒரு கலவரம் நடைபெறும் என்று தெரிந்திருந்தால் முன்னெச்சரிக்கையாகவே கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் போராட்டம் நடைபெறுகின்றபோது, அங்கே இருக்கிறவர்கள், அவர்களது உணர்வை பிரதிபலிக்கிற விதமாக அமைதியாக அந்த ஊர்வலத்திற்கு செல்வார்கள்.
அங்கே இருக்கின்ற மாவட்ட கலெக்டரிடத்திலோ, சார் ஆட்சியரிடத்திலோ தங்களுடைய குறைகளைச் சொல்லி பரிகாரம்பெற முற்படுவார்கள். அதோடு அரசுக்குத் தெரிவிப்பார்கள். அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். தொடர்ந்து அவர்கள் வைத்த கோரிக்கை முழுவதும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நான் ஏற்கனவே சொன்னமாதிரி, சில அரசியல் கட்சித் தலைவர்களும், சில சமூகவிரோதிகளும் ஊடுருவி இதை ஒரு தவறான பாதையில் அழைத்துச்சென்ற காரணத்தினால்தான் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story