“ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை எங்களது போராட்டம் தொடரும்” துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் ஆவேசம்


“ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை எங்களது போராட்டம் தொடரும்” துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் ஆவேசம்
x
தினத்தந்தி 24 May 2018 10:15 PM GMT (Updated: 24 May 2018 7:47 PM GMT)

“ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை எங்களது போராட்டம் தொடரும்” என்று துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் ஆவேசமாக கூறினர்.

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் காயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தபால்தந்தி காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான பரமசிவம் என்பவருக்கு வலது தொடையில் குண்டு அடிபட்டு இருந்தது. அறுவை சிகிச்சை மூலம் அந்த குண்டு அகற்றப்பட்டது. மேலும், போலீசார் நடத்திய தடியடியில் அவரது வலது பக்க கண்ணில் ஏற்பட்ட காயத்துக்கு தையல் போடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பரமசிவம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஆலையை மூடக்கோரி நாங்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று (அதாவது நேற்று) காலை வரை 13 பேரை பலி கொடுத்துள்ளோம். இந்த உயிர்ப்பலி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகவே. இன்னும் எத்தனை உயிர் போனாலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.

இதேபோன்று தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர் காமராஜ் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களது போராட்டத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. அமைதிவழியில் போராடினோம். போலீசார் எங்களை தாக்கி விட்டனர். இதனால் எனக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகவே இத்தனை உயிர்களை பலி கொடுத்துள்ளோம். ஆலையை மூடும் வரை எங்களது மக்கள் போராடுவார்கள்” என்றார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பால்காரர் சிவகுமார் என்பவர் கூறுகையில், “நான் கடந்த 22-ந் தேதி வீடு, வீடாக சென்று பால் வினியோகம் செய்து விட்டு, கலெக்டர் அலுவலகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பால்கேனுடன் சென்றேன். அங்கு நின்ற போலீசார், எனது மோட்டார் சைக்கிளை கீழே தள்ளிவிட்டு தாக்கினர். இதில் எனக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

துப்பாக்கி சூட்டில் கூட்டாம்புளி பங்குதந்தை ஜெயசீலனுக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. அவரது இடுப்பில் பாய்ந்த குண்டு ஒருபக்கம் பாய்ந்து மற்றொரு பக்கம் வெளியேறியது. இதில் அந்த பகுதியில் ஓட்டை விழுந்தது. இதையடுத்து அவர், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

Next Story