சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் செல்போன், நகை திருடிய 2 பேர் கைது
சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் செல்போன், நகை திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அடையாறு,
சென்னை கோட்டூர்புரம் ரிவர் வியூ சாலையில், கோட்டூர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன், போலீஸ்காரர் செல்வம் அடங்கிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். போலீசாரை கண்டதும், ஆட்டோவை நிறுத்தி விட்டு அதில் இருந்த 2 வாலிபர்கள் கீழே குதித்து தப்பி ஓடினர்.
உடனடியாக அவர்கள் 2 பேரையும் போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் ஏராளமான செல்போன்கள் இருந்தன. பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள், கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் கிருஷ்ணா என்ற மகேஷ் குமார்(வயது 32) மற்றும் பீகாரைச் சேர்ந்த அரவிந்த்குமார்(23) என்பதும், இருவரும் சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் தங்கி இருப்பதும் தெரிந்தது.
இவர்கள் இருவரும் சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் ரெயில் பயணிகளிடம் செல்போன், நகை மற்றும் பயணிகளுக்கு உதவுவதுபோல் நடித்து அவர்களின் உடைமைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
குறிப்பாக இவர்கள், ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில் புறப்பட்டு மெதுவாக சென்று கொண்டிருக்கும் போதும், அதேபோல் ரெயில் நிலையங்களுக்கு உள்ளே மெதுவாக வரும் போதும், சிக்னல்களில் ரெயில் நிறுத்தப்பட்டு இருக்கும்போதும் ரெயில் பெட்டியின் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும் பயணிகள், அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் பயணிகளிடம் நகை, செல்போன் பறிப்பது மற்றும் உடைமைகளை திருடி விட்டு ஓடும் ரெயிலில் இருந்து வெளியே குதித்து தப்பி ஓடிவிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.
இவ்வாறு பயணிகளிடம் இருந்து திருடிய செல்போன்களை விற்பதற்காக ஆட்டோவில் கொண்டு சென்றபோதுதான் போலீசாரின் வாகன சோதனையில் வசமாக சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து மகேஷ்குமார், அரவிந்த்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 55 செல்போன்கள், 2½ பவுன் மோதிரம் மற்றும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story