தூத்துக்குடியில் கலவரம் வெடித்தது தொடர்பாக அடுத்தடுத்து வழக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவுகள்
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. #SterliteProtest #Thoothukkudi
மதுரை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, துப்பாக்கி சூடு சம்பவத்தில் நேரடியாக தலையிடுவது பற்றி தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.
அத்துடன், கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் அடுக்கடுக்காக 10 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும்.
* துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
* இந்த சம்பவம் பற்றி ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தர விடவேண்டும்.
சி.பி.ஐ. விசாரணை
* சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
* துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றி உயர்தர சிகிச்சை அளிக்கவும், அதற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கவும் உத்தரவிட வேண்டும்.
* தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்தன.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், இறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும், முடக்கி வைக்கப்பட்டுள்ள இணையதள சேவையை மீண்டும் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரினார்கள்.
இதை கேட்ட நீதிபதிகள், துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் எத்தனை பேர், அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் உறவினர்களை அனுமதிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:-
“தூத்துக்குடியில்தான் பதற்றம் நிலவுகிறது. அவ்வாறு இருக்கும் போது, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய தள சேவையை முடக்கியது ஏன்? இதன் மூலம் டிஜிட்டல் இந்தியா அந்த மாவட்டங்களில் முடங்கிப்போய் உள்ளது. அந்த மாவட்டங்களில் இணைய தள சேவையை முடக்கியதால், பொதுமக்கள் பாதிக்கப்படமாட்டார்களா? அந்த பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு உள்ளனவா? தற்போதைய நிலையில் இணையதள சேவை மிக முக்கியமானது ஆகும்.
வங்கி பரிவர்த்தனை, மாணவர்கள் தங்களது படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது, தகவல்களை பரிமாறிக்கொள்வது போன்ற விஷயங்களுக்கு இணையதளத்தை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு இருக்கும் போது, நெல்லை, குமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கியது சரியல்ல.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பதில் அளிக்கையில், நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ளவர்களை தவறான தகவல்கள் கொடுத்து அழைப்பதற்கு இணையதளம் பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாகவே அந்த மாவட்டங்களிலும் இணையதள சேவை முடக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதிகள், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த பொதுமக்கள் குறித்தும், இணையதள சேவையை முடக்கியது குறித்தும் அரசிடம் கேட்டுத் தெரிவிக்க அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, 3 மணி அளவில் அந்த வழக்கு விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லபாண்டியன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்தவர்கள் மொத்தம் 72 பேர். அவர்களில் 52 பேர் தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் மதுரையில் சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். மற்றவர்கள் வெளிநோயாளிகள் ஆவர். போலீசார் 72 பேரும் தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயம் அடைந்து சிகிச்சை பெறும் 52 பேர்களில் 26 பேருக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும், மீதமுள்ள 26 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதமும் அரசு தரப்பில் இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை கூடுதலாக வழங்க அரசு முடிவு செய்து இருக்கிறது.
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக மொத்தம் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 141 வாகனங்கள் சேதமடைந்து உள்ளன. காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் நெல்லை, குமரி மாவட்டங்களில் இணையதளசேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை முடிவில், இரவு 7 மணிக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி, 7 மணி அளவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள் வருமாறு:-
தூத்துக்குடி சம்பவத்தையடுத்து, இணையதள சேவை முடக்கப்பட்ட விஷயத்தில், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு இணையதள சேவையை மீண்டும் வழங்கி விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்கிறோம்.
அரசு அதிகாரிகள் நாளையே (அதாவது இன்று) தூத்துக்குடியில் ஆய்வுக்கூட்டம் நடத்தி இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போது தூத்துக்குடி மாவட்டத்துக்கும் இணையதள சேவையை நாளையே (அதாவது இன்று) வழங்குவது பற்றி முடிவு செய்யவேண்டும். மேலும் அங்குள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யவும், வாகன போக்குவரத்தை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
துப்பாக்கி சூடு-தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோரில் உயர்தர சிகிச்சை தேவைப்படுபவர்களை மதுரைக்கு கொண்டு சென்று அங்குள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையிலோ, தனியார் மருத்துவமனைகளிலோ சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்குரிய செலவை அரசே ஏற்க வேண்டும். பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீட்டை அதிகரித்து வழங்குவது பற்றியும் அரசு முடிவெடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி அளிப்பதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதை மாவட்ட முதன்மை நீதிபதி, தலைமை குற்றவியல் நீதிபதி ஆகியோர் மேற்பார்வை செய்ய வேண்டும். இதுகுறித்து வருகிற ஜூன் 6-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு குறித்து, சி.பி.ஐ. உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்குகள் அனைத்தும் ஜூன் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story