மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை பட்டியல் வெளியீடு பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பெருமிதம்


மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை பட்டியல் வெளியீடு பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பெருமிதம்
x
தினத்தந்தி 26 May 2018 5:15 AM IST (Updated: 26 May 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மத்திய அரசு பெருமிதம் அடைந்துள்ளது.

சென்னை, 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பு ஏற்று இன்றுடன் (சனிக்கிழமை) 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த 4 ஆண்டு காலங்களில் செய்த சாதனைகள் குறித்து மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் செயல்படுத்தப்படும் 104 மாவட்டங்களில் பாலின பிறப்பு விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

* பெண் குழந்தைகள் நலன் மற்றும் அவர்களது எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் பிரதமர் சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற சேமிப்பு திட்டத்தின் கீழ் 1.26 கோடிக்கு மேல் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் வரை ரூ.19 ஆயிரத்து 183 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2016-17-ல் 3.31 கோடிக்கும் அதிகமான புதிய இணைப்புகளும், 2017-18-ல் 2.82 கோடிக்கும் அதிகமான புதிய இணைப்புகளும் வழங்கப்பட்டன.

* பணியில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளை முறையாக கவனித்துக் கொள்ள 6 மாத பிரசவ கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* பிரதமர் சுரக்‌ஷித் மாத்ரிதவா அபியான் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9-ந்தேதி தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிக அபாயம் நிறைந்த கர்ப்ப சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

* ஆபத்தில் சிக்கியுள்ள பெண்கள் காவல்துறைக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எச்சரிக்கை செய்யும் வகையில் அனைத்து செல்போன்களிலும் எச்சரிக்கை பொத்தான்கள் இருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

* பெண்கள் உதவி தேவை என்றால் தொடர்புகொள்ள அவசர கால தொடர்பு எண் 181 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 29 மாநிலங்கள் இந்த வசதியை செயல்படுத்தி வருகின்றன.

* குடும்ப ஆதரவு இல்லாத, கணவனை இழந்த பெண்களுக்காக விடுதிகள் அமைக்கப்பட உள்ளது.

* தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.95 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* 2018-19 பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான ஒதுக்கீடு 62 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.4 ஆயிரத்து 700 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* இஸ்லாமிய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.

* ஆண்டுக்கு ரூ.12 மட்டும் பிரீமியமாக செலுத்தி ரூ.2 லட்சம் பெறும் வகையில் பிரதமரின் சுரக்‌ஷா காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

* பிரதமரின் முதியோர் பாதுகாப்பு திட்டத்துக்கான ஓய்வூதிய முதலீட்டு வரம்பு ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது.

* தீன்தயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 464 கிராமங்கள் 100 சதவீதம் மின்சாரம் பெற்றுள்ளன.

* காமன்வெல்த் போட்டியில் 66 பதக்கங்களை பெற்று இந்தியா 3-வது இடத்தை பிடித்தது.

* கடந்த 4 ஆண்டுகளில் 92 மருத்துவ கல்லூரிகள் (46 அரசு மற்றும் 46 தனியார்) அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 646 பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

* தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறைகளுக்கான ஊக்கத்தொகை ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* குறைந்த விலையில் எல்.இ.டி. பல்பு வழங்கும் உன்னத் ஜோதி திட்டத்தின் கீழ் 29.83 கோடிக்கும் மேற்பட்ட பல்புகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

* ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார்.

* பணமற்ற ஊதிய பரிவர்த்தனையை ஏற்படுத்தும் வகையில் 50 லட்சம் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன.

* வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணிக்கை 29.17 சதவீதம் அதிகரித்துள்ளது.

* அதிக அளவு பணத்தை செலுத்திவிட்டு கணக்கு தாக்கல் செய்யாத 3 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 2.1 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

* பினாமி சொத்து சட்டம், கருப்பு பணம் மற்றும் வரிவிதிப்பு சட்டம், வருவாயை தாமாக முன்வந்து தெரிவிக்கும் சட்டம் போன்றவைகள் அறிமுகம்.

* மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காகவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் இந்திய ராணுவம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி பாகிஸ்தான் வசம் உள்ள கஷ்மீரில் துல்லியத் தாக்குதல்களை நடத்தியது.

* எல்லை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 209 கோடி அனுமதிக்கப்பட்டது. எல்லை பகுதியில் 246 கிலோ மீட்டர் வேலி அமைப்பு. எல்லைச்சாலைகள் 566 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைப்பு. 785 கி.மீ. தூரத்துக்கு பேரொளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

* வன்முறை சம்பவங்கள் 36.6 சதவீதம் குறைந்துள்ளது.

* கோட்டையாக்கப்பட்ட காவல்நிலையங்கள் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 320 காவல்நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story