நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர்சயீத் கண் கலங்கினார்


நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர்சயீத் கண் கலங்கினார்
x
தினத்தந்தி 26 May 2018 4:15 AM IST (Updated: 26 May 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர்சயீத் நேற்று ஆஜரானார்.

சென்னை, 

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர்சயீத் நேற்று ஆஜரானார். ஜெயலலிதா குறித்து நீதிபதி கேள்வி எழுப்பியபோது அவர் கண் கலங்கினார். உயிரோடு இருக்கும்போது பார்க்க முடியவில்லை என்று அவர் கதறினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவின் பள்ளித்தோழியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர்சயீத் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

ஆணையத்தில் ஆஜரான அவரிடம், பல்வேறு கேள்விகளை நீதிபதி கேட்டார். அப்போது பதர்சயீத் உணர்ச்சிவசப்பட்டார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை நினைத்து கண் கலங்கினார்.

‘2011-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவை சந்தித்து பேசக்கூடிய வாய்ப்பு இருந்தது. 2011-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவை சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை. அவரை பார்க்க பலமுறை முயற்சி செய்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது’ என்று பதர்சயீத் கூறி உள்ளார். அதற்கு நீதிபதி, உங்களை யார் பார்க்கவிடவில்லை? என்று கேள்வி எழுப்பினார். ‘அது இறைவனுக்குத் தான் தெரியும்’ என்று பதர்சயீத் பதில் அளித்தார்.

மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கும்படி பூங்குன்றனிடம் பலமுறை மனு கொடுத்தேன். ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா பிசியாக இருப்பதாக கூறினார். நான் சந்திக்க விரும்பிய விஷயத்தை ஜெயலலிதாவிடம் சொன்னீர்களா? என்று பூங்குன்றனிடம் கேட்டேன். அதற்கு அவர், ஜெயலலிதா பிசியாக இருப்பதால் இதையெல்லாம் கூற முடியாது என்றார்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்திக்க சென்றேன். நான் யார் என்ற விவரத்தை கூறிய பின்பு, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த 2-வது மாடிக்கு அனுப்பினர். அங்கிருந்த அறையில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர் இருந்தனர். ஜெயலலிதா இருந்த அறைக்குள் என்னை அனுமதிக்கவில்லை. இதனால் அவர் இருந்த அறையை பார்த்து வணங்கிவிட்டு சென்று விட்டேன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணை ஆணையத்தின் வக்கீல் எஸ்.பார்த்தசாரதி, பதர்சயீத்திடம் குறுக்கு விசாரணை செய்தார். ஆணையத்தில் இருந்து வெளியே வந்த பதர்சயீத் நிருபர்களிடம், ‘உயிரோடு இருக்கும்போது ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. அவர் இறந்த பின்பு என்ன சொல்வது’ என்று கதறியபடி கண்ணீர் விட்டார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

2011-ம் ஆண்டு சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த சமயத்தில் உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக பொன்.மாணிக்கவேல் இருந்தார். இதைத்தொடர்ந்து, போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி நேற்று அவர் ஆணையத்தில் ஆஜரானார். நீதிபதி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

Next Story