ரத்ததானம் செய்யும் குத்துச்சண்டை வீரர் குண்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பலியானார் உறவினர் வெளியிட்ட உருக்கமான தகவல்
ரத்ததானம் செய்யும் குத்துச்சண்டை வீரர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குண்டு காயம் பட்டு ரத்த வெள்ளத்தில் பலியானதாக அவரது உறவினர் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் பலியானவர்கள் குறித்து உருக்கமான தகவல்கள் வெளிவந்துள்ளது.
அது பற்றிய விவரம் வருமாறு:-
தூத்துக்குடி புஷ்பாநகர் 1-வது தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 22) துப்பாக்கி சூட்டில் பலியானார். ரஞ்சித்குமார் பற்றி இவருடைய சித்தப்பா ஆறுமுகம் கூறியதாவது:-
ரஞ்சித்குமார் என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவர் குத்துச்சண்டை வீரரும் ஆவார். மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு உள்ளார்.
மேலும் ரத்ததானம் செய்வதில் ஆர்வமாக உள்ளவர். பலமுறை ரத்ததானம் செய்துள்ளார். இதற்காக தனியார் அமைப்பு ஒன்று அடுத்த மாதம் (ஜூன்) ரஞ்சித்குமாருக்கு விருது வழங்குவதற்காக அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த நிலையில் அவர் துப்பாக்கி சூட்டில் துரதிஷ்டவசமாக ரத்த வெள்ளத்தில் இறந்துவிட்டார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும்.
துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ரஞ்சித்குமார் உடலை பெற்றுக் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
துப்பாக்கி சூட்டில் பலியான தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த கந்தையா (55) என்பவரின் மனைவி செல்வமணி கூறியதாவது:-
எனது கணவர் கட்டிட தொழிலாளி. அவருக்கு கிடைக்கும் குறைந்த அளவிலான வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தேன். ஆனால் அவர் இந்த சம்பவத்தில் பலியாகி விட்டார். எனது கணவரோட ஆசை ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான்.
இந்த மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தனது உயிரை கொடுத்து உள்ளார்.
எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட வேண்டும். எனது கணவரை சுட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு மாற்றுத்திறனாளி மகன் உள்ளான். அவனை எப்படி காப்பாற்றப்போகிறேன் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் சிலர் கூறுகையில், “துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை தடியடியில் காயம் அடைந்ததாக சொல்லும்படி போலீசார் வற்புறுத்துகின்றனர்.
தடியடியில் காயம் அடைந்தவர்களை கலவரத்தின்போது கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறுமாறும் சொல்கிறார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் உங்கள் மீது வேறு வகையில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி மிரட்டுகின்றனர்” என்றனர்.
Related Tags :
Next Story