ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும்; ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை நிறுவனம் (ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட்) கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடந்து வந்தன. ஆனால் அப்பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுகளால் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது என கூறி வந்தனர். இதனை தொடர்ந்து ஆலையை மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட 18 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் 100வது நாளன்று பெரிய அளவில் பேரணியாக நடத்தப்பட்டது. இதில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியின்பொழுது வழியில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர்.
எனினும் பேரணி ஆட்சியர் அலுவலகத்தினை நோக்கி சென்றது. அங்கு போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 150க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கண்டனங்களையும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த மே 24ந்தேதி காலை ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலை எந்தவிதத்திலும் சுயமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தினை உபயோகப்படுத்த முடியாது. தொழிற்சாலை பயன்பாட்டுக்காக வழங்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story