தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பொதுமக்களின் எண்ணத்திற்கு மாறாக அரசு செயல்படாது அமைச்சர் தங்கமணி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பொதுமக்களின் எண்ணத்திற்கு மாறாக அரசு செயல்படாது அமைச்சர் தங்கமணி
நாமக்கல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பொதுமக்களின் எண்ணத்திற்கு மாறாக அரசு செயல்படாது என அமைச்சர் தங்கமணி கூறினார்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளின் போராட்டத்தின் போது 16 பேர் சுட்டு கொல்லப்பட்டபோது, முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதி அப்போது முன்னுதாரணமாக இருந்தாரா? என்பதுதான் எங்களது கேள்வி.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களின் எண்ணத்திற்கு மாறாக அ.தி.மு.க. அரசு என்றைக்கும் செயல்படாது. தூத்துக்குடியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை பணிகள் நடைபெறுகின்றன.
மற்றபடி முதல்–அமைச்சரோ, அமைச்சர்களோ அங்கு செல்ல பயம் இல்லை. மற்ற அரசியல் கட்சியினர், அரசியல் செய்வதற்காக அங்கு செல்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு முன்னோட்டமாக தான் முதலில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. படிப்படியாகத்தான் எதையும் செய்யமுடியும்.
பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்களில் மின்சார வாரியத்திற்கு ரூ.1,000 கோடி அளவிற்கு மின்கட்டண பாக்கி உள்ளது. மானியக் கோரிக்கைகள் வரும்போது, அந்தந்த துறைகள் மூலம் மின்கட்டணம் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர். கோடைகாலம் என்பதால் இந்தியா முழுவதும் நிலக்கரி தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியினை வழங்குமாறு மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தோம். அவர்கள் கொடுத்த காரணத்தினால் தற்போது 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பில் உள்ளது. மேலும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.
ஒருவார காலமாக தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை, தமிழகத்தில் பெய்து வருவதால் மின்சாதன பொருட்கள் சேதமடைகின்றன. அவற்றினை சரிசெய்ய இரவு, பகல் பாராமல் மின்வாரிய ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story