அலை ஓய்ந்துவிட்டது: 4 ஆண்டுகால மோடியின் ஆட்சி மக்களின் துயரமாக இருக்கிறது திருநாவுக்கரசர்


அலை ஓய்ந்துவிட்டது: 4 ஆண்டுகால மோடியின் ஆட்சி மக்களின் துயரமாக இருக்கிறது திருநாவுக்கரசர்
x
தினத்தந்தி 27 May 2018 1:30 AM IST (Updated: 27 May 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

4 ஆண்டுகால மோடியின் ஆட்சி மக்களின் துயரமாக இருக்கிறது என்றும், மோடியின் அலை ஓய்ந்துவிட்டது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

4 ஆண்டு கால மோடியின் ஆட்சி மக்களின் துயரமாக, இந்திய வரலாற்றிலேயே மோசமான ஆட்சியாக இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகாலம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை இனி நிறைவேற்றப்போவதில்லை. மோடியின் செல்வாக்கு குறைந்துவிட்டது. மோடி அலை ஓய்ந்து விட்டது. ராகுல்காந்தியின் அலை வீசுகிறது.

தேர்தல் வரும்போது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எதிர்காலத்தில் நல்லாட்சியை அமைக்கும். மக்கள் ஆதரவு தர தயாராக இருக்கிறார்கள்.

மக்கள் ஆதரவை திரட்டும் வகையில் மோடி அரசுக்கு எதிரான, மதவாதம், தீவிரவாதத்துக்கு எதிரான ஜனநாயக ரீதியான கட்சிகள் எதிர்காலத்தில் இணைந்து வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் காலங்கள் கனிந்துகொண்டு இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர், அமைச்சர்கள் பார்க்காமல் இருப்பது தமிழ்நாட்டில் அரசு இயங்குகிறதா? என்ற கேள்வி எழுகிறது. 144 தடை உத்தரவு போட்டு இருப்பதால் அங்கு போனால் வழக்கு போடுவதால், போகாமல் இருக்கிறார்களா?. ஆறுதல் சொல்வதற்கு செல்ல பயம் இருந்தால் எதற்கு பதவி? ராஜினாமா செய்யுங்கள்.

இதேபோல், ஆறுதல் சொல்ல சென்ற என் மீதும், ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் மீதும் வழக்கு போட்டு இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தூங்குவது போல், நாங்களும் தூங்க முடியாது. அதை சட்டத்தின் மூலம் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

தலைமை செயலகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தியதை, அரசியல் நாடகம் நடத்துவதாக சிலர் கூறினார்கள். ‘உலகம் ஒரு நாடகமேடை. அதில் எல்லோரும் நடிகர்கள் தான்’ என்று ஷேக்ஸ்பியர் சொல்கிறார். அந்தவகையில், நானும், மு.க.ஸ்டாலினும் நடிகர்கள் தான். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் நடிகர் தான்.

வருகிற 29–ந்தேதி சட்டமன்றம் கூடுகிறது. அதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சின்னாரெட்டி கூறுகையில் ‘கடந்த 4 ஆண்டுகால பா.ஜ.க.வின் செயல்பாடு மக்களை அவதிக்குள்ளாக்கி இருக்கிறது. சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்திய குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொன்ன மோடி, இதுவரை ஒருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 கூட போடவில்லை. பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமித்ஷாவின் மகன் ஊழல் செய்ததால் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக மாறிவிட்டார். பா.ஜ.க.வுக்கு எதிராக, அவர்கள் ஆட்சி செய்தது போதும் என்றும், காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியை விரும்பும் கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கிறது’ என்றார்.

Next Story