காடுவெட்டி குரு மரணம்: பல்வேறு இடங்களில் 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் மீது கல்வீச்சு
வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு மரணமடைந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் 30-க்கும் மேற்பட்ட பஸ்களின் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் கண்ணாடிகள் உடைந்தன.
கடலூர்,
வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு மரணமடைந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் 30-க்கும் மேற்பட்ட பஸ்களின் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் கண்ணாடிகள் உடைந்தன. கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். ஜெ.குருவின் மறைவை தொடர்ந்து கடலூர், வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சேத்தியாத்தோப்பு பகுதியில் 4 பஸ்களும், சிதம்பரத்தில் 2 பஸ்களும், பண்ருட்டியில் 2 பஸ்களும் என பல்வேறு இடங்களில் மொத்தம் 15 பஸ்கள் மீது கல்வீசப்பட்டதில் அவற்றின் கண்ணாடிகள் உடைந்தன. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம் பகுதியில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசப்பட்டதால் நேற்று ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. விருத்தாசலம், நெய்வேலி, வடலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூரில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு உள்ள போளூர், கலசபாக்கத்தில் 3 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக போளூர் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாரஞ்சி அருகே மர்மநபர்கள் மரத்தை வெட்டி சாலையின் குறுக்கே போட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஜம்புகுளம், வெங்கடாபுரம் உள்ளிட்ட 4 இடங்களில் 4 தனியார் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த காடந்தேத்தி பஸ் நிலையம் அருகே உள்ள தி.மு.க.. அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளின் கொடிக்கம்பங்களை மர்மநபர்கள் உடைத்து ஆற்றில் வீசினார்கள். கொடிக்கம்பங்களை உடைத்து சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அமரன்திட்டு பகுதியில் அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன. பஸ் டிரைவர் பாலகோட்டை சேர்ந்த மாதையன் படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பஸ் உள்பட சேலம், தர்மபுரி மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மொத்தம் 12 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. எடப்பாடி பகுதியில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story