ஏழைகளின் சொத்துகளை அபகரிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


ஏழைகளின் சொத்துகளை அபகரிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 1 Sept 2018 1:50 AM IST (Updated: 1 Sept 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் மாபியாக்களின் செயல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை, 

ஐகோர்ட்டில், ஜெ.சேகர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை சூளையில், தர்மராஜா கோவில் தெருவில், 240 சதுர அடியில் உள்ள கடையில், 1998-ம் ஆண்டு முதல் சைக்கிள் கடை நடத்தி வருகிறேன். இந்த கடையை ரூ.2.50 லட்சத்துக்கு அதன் உரிமையாளரிடம் இருந்து வாங்கினேன். இதற்காக போடப்பட்ட விற்பனை பத்திரத்தை பதிவு செய்யவில்லை.

தற்போது உரிமையாளர் இறந்துவிட்டார். அவரது மகன் லோகநாதன், கட்டிடத்தை விட்டு காலி செய்யும்படி எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக சிவில் கோர்ட்டில் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த நிலையில், இந்த சிவில் பிரச்சினையில், வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவையில்லாமல் தலையிடுகிறார். இந்த விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட லோகநாதன் சார்பில் ஆஜரான வக்கீல், ‘சூளையில் உள்ள கடையில் மனுதாரர் வாடகைக்கு சைக்கிள் கடை நடத்தி வருகிறார். லோகநாதன் கடந்த பிப்ரவரி மாதம் தான் 18 வயது பூர்த்தி அடைந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரும், இவரது தாய், கல்லூரியில் படிக்கும் சகோதரி ஆகியோர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மனுதாரர் கடையை இடித்து புதிதாக கட்ட முயற்சித்தார். இதற்கு லோகநாதனின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை அசிங்கமாக பேசியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது’ என்று வாதிட்டார்.

அதேபோல, வேப்பேரி இன்ஸ்பெக்டர் டி.வீரக்குமார் நேரில் ஆஜராகி, ‘மனுதாரர் சேகர் வட்டித் தொழில் செய்கிறார். இவர் மீது பல புகார்கள் உள்ளன. இவர் மோசமான நபர்’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகரில் சொத்துகளின் விலை உயர்வினால், சொத்துகளை அபகரிக்கும் ‘ரியல் எஸ்டேட் மாபியாக்களின்’ குற்றச்செயல்களும் அதிகரித்துவிட்டது.

இந்த சட்டவிரோதமான கும்பல், ஏழைகள், தனியாக வசிக்கும் பெண்கள், வயதானவர்கள் ஆகியோரது பெயரில் உள்ள சொத்துகளை எல்லாம் அபகரிக்கின்றனர். இந்த சட்டவிரோத ரியல் எஸ்டேட் மாபியா கும்பலை சேர்ந்தவர்களை போலீஸ் அதிகாரிகள் இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்.

இந்த வழக்கில், மனுதாரர் சேகர், வாடகைதாரராக சொத்துக்குள் நுழைந்துள்ளார். பின்னர் இறந்து போனவரிடம் ரூ.2.50 லட்சம் கொடுத்து, சொத்தை வாங்கியதாக உரிமை கோருகிறார். ஆனால், அதற்காக எந்த ஒரு ஆதாரத்தையும் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்யவில்லை.

மேலும், இந்த பணம் கொடுத்த விவகாரம், இறந்தவரின் மகனான லோகநாதன், அவரது தாயார், சகோதரி ஆகியோருக்கு எதுவும் தெரியவில்லை. கடையில் வாடகைக்கு, குத்தகைக்கு இருப்பதற்கான ஆதார ஆவணங்கள் கூட மனுதாரரிடம் இல்லை.

இப்போதெல்லாம், சொத்துகளை அபகரிக்கும் கும்பல்கள், தங்களது முறைகேடான, சட்டவிரோதமான செயலை விஞ்ஞான ரீதியாக செய்கின்றனர். இதையெல்லாம் இந்த ஐகோர்ட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

கட்டிடத்தின் மேல்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதை இடித்துவிட்டு, புதிய கடையை கட்ட மனுதாரர் சேகர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இவர், கடையின் உரிமையாளர் இல்லை. கடை இடிந்து விழும் நிலை ஏற்பட்டால், கடையை விட்டு வெளியேறி, அவற்றை உரிமையாளரிடம் ஒப்படைத்து, சரி செய்யவேண்டும்.

அதை செய்யாமல், இவரே கட்டிடத்தை இடித்து புதிதாக கட்ட முயற்சித்துள்ளார். மேலும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் கடைக்கு வாடகையும் கொடுக்கவில்லை. இந்த 8 ஆண்டுகளில் கடை வாடகையாக ரூ.2 லட்சத்து 89 ஆயிரம் மனுதாரர், கடையின் உரிமையாளருக்கு கொடுக்க வேண்டும்.

எனவே, லோகநாதனின் தந்தையிடம் கொடுத்ததாக கூறப்படும் ரூ.2.50 லட்சத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்படவில்லை. அதனால், கடையில் இருந்து மனுதாரர் சேகரை போலீசார் வெளியேற்றவேண்டும். பின்னர், அந்த கடையை உரிமையாளரிடம் 48 மணி நேரத்தில் ஒப்படைக்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story