தமிழகத்தில் அதிக அளவில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை ஜப்பான் குழுவினர் பாராட்டு


தமிழகத்தில் அதிக அளவில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை ஜப்பான் குழுவினர் பாராட்டு
x
தினத்தந்தி 1 Sept 2018 3:30 AM IST (Updated: 1 Sept 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அதிகளவில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பது பாராட்டுக்கு உரியது என்று ஜப்பான் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளின் உட்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.1,634 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலான குழு ஜப்பான் ஆஸ்பத்திரிகளின் சேவை மற்றும் மேலாண்மை குறித்து தெரிந்துகொள்ள கடந்த மே மாதம் ஜப்பான் சென்றது. அதேபோல தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் மூலம்(தாய் திட்டம்) உலக தரத்திலான அதிநவீன விபத்து காய சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பான திறமை மாற்றளிப்புக்கான வழிவகைகள் குறித்து அறிந்துகொள்ள அண்மையில் இக்குழு ஆஸ்திரேலியா சென்றது.

இந்திய அரசும், ஜப்பான் அரசும் இணைந்து பல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில், ஜப்பான் நாடு இந்தியாவில் உள்ள நர்சுகளை ஜப்பான் மருத்துவம் மற்றும் மருத்துவம்சாரா சேவைகளில் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஜப்பான் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் கென்ஜி அயா தலைமையிலான குழுவினர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகளின் செயல்பாட்டினை களஆய்வு செய்தனர். இக்குழுவில் சர்வதேச பல்கலைக்கழகத்தை சேர்ந்த இணை பேராசிரியர் டாக்டர் மெகுமி கொடைரா, ‘நெக்ஸ்ட் ஷேரிங்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி யசுனோரி யவாட்டா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவினர் நர்சு பயிற்சி பள்ளிக்கும், கே.கே.நகரில் அமைந்துள்ள அரசு புனர்வாழ்வு ஆஸ்பத்திரிக்கும் சென்று நர்சுகளின் பங்களிப்பை கேட்டறிந்தனர். அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி வளாகத்தில் ஜப்பான் நிதியுதவியுடன் ரூ.90 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தையும், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவையும் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை பாராட்டினர்.

எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியை சர்வதேச தரத்திற்கு உயர்த்திட அனைத்து உதவிகளையும் ஜப்பான் அரசு தொடர்ந்து வழங்கும் என உறுதியளித்தனர். பின்னர், இக்குழுவினருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜப்பான் குழுவினர் பேசியதாவது:-

அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் நர்சுகளின் அர்ப்பணிப்புடன் கூடிய தன்னலமற்ற சேவை எங்களுக்கு நெகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்பான செயல்பாட்டின் மூலம் தாய்-சேய் இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் அடையவேண்டிய நிலையான வளர்ச்சி இலக்குகளை தமிழகம் 14 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடைந்து இமாலய சாதனை புரிந்துள்ளது.

அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் செயல்படுத்தப்பட்டுவரும் தாய்ப்பால் வங்கித் திட்டம் புரட்சிகரமான திட்டமாகும். தமிழக அரசின் சீரிய திட்டங்களால் அதிகளவில் ஏழை எளிய மக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் தரமான சிகிச்சை பெற்றுவருவது பாராட்டுக்குரியது. ஜப்பான் அரசு, தமிழகத்தில் மேலும் பல்வேறு திட்டங் களை செயல்படுத்த எல்லாவித ஒத்துழைப்பையும் நல்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், “தமிழக அரசு, ஜப்பான் அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும்” என்று உறுதி அளித்தார்.

இந்த நிகழ்வின்போது சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் நாகராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story