இந்தியாவின் பன்முகத்தன்மையை தி.மு.க. பாதுகாக்கும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
கருணாநிதி தந்த லட்சியச்சுடரை கையில் ஏந்தி இந்தியாவின் ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் தி.மு.க. பாதுகாக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த கருணாநிதியின் பேராற்றலை எடுத்துரைக்கும் வகையில் தெற்கில் உதித்தெழுந்த சூரியன் எனும் தலைப்பில் அகில இந்தியத்தலைவர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்வு, சென்னையில் நடைபெற்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
திராவிட இயக்கத்தின் சமூகநீதி, சமத்துவ சுயமரியாதை கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து தனது தலைவர்களான பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் நடைபோட்டு, அரசியல் களச் சூழல்களுக்கேற்ப வியூகங்களை வகுத்து, தேர்தல் வெற்றி-தோல்விகளுக்கு அப்பால், அனைத்துவித நெருக்கடி காலங்களையும் எதிர்கொண்டு, இந்தியாவின் ஜனநாயகத்தன்மை நிலைநாட்டப்படவும் திராவிட இயக்கத்தின் ஆணிவேரான சமூக நீதிக் கொள்கையை இந்தியாவின் தேசியக் கொள்கையாக்கிடவும் தமிழ் மொழி காக்கும் போரில் முழங்கியதன் வாயிலாக நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் மக்களின் தாய்மொழி காத்திட்டவர் கருணாநிதி.
மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கு மாற்றாக மாநில உரிமைகளை மேம்படுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தை வகுத்திடவும் கருணாநிதி ஆற்றியுள்ள பணிகள், இந்தியாவின் வடகோடியில் உள்ள காஷ்மீர் முதல் தென்கோடியில் உள்ள கேரளம் வரை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை அகில இந்தியத் தலைவர்கள் எடுத்துரைத்த போது மெய்சிலிர்த்தது. 8 கோடி தமிழ்நாட்டவர்க்கு மட்டுமின்றி, 120 கோடி இந்திய மக்களுக்கும் அரும்பாடுபட்டு அவர்தம் உரிமைகள் காத்தவர் கருணாநிதி என்பது அனைத்துக் கட்சித் தலைவர்களின் உரை மூலம் நிலை நிறுத்தப்பட்டது.
அதுமட்டுமல்ல, தெற்கில் உதித்தெழுந்து தேசம் முழுவதும் ஒளி வீசிய கருணாநிதி எனும் ஓய்வறியா சூரியன் கட்டிக்காத்த ஜனநாயக மாண்பினை சமூக நீதிக் கொள்கைகயை, மாநில உரிமைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடமை இருப்பதை நினைவேந்தல் நிகழ்வில் பேசியோர் அனைவரும் நினைவூட்டியுள்ளனர். அதனை நான் ஒருவனாகச் செய்திட இயலாது. உங்கள் அனைவரின் ஆதரவும் அவசியம். தி.மு.க. எனும் மாபெரும் இயக்கம் கருணாநிதி தந்த லட்சியச் சுடரை கையில் ஏந்தி இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும். மாநில உரிமையை மீட்டெடுக்கும் பணியில் முன்னிற்கும். இதனை சூளுரையாக மேற்கொண்டு களம் காண்போம். கருணாநிதி மீது ஆணையிட்டு வெல்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story