தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்: தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள்


தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்: தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 1 Sept 2018 3:51 AM IST (Updated: 1 Sept 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தற்போது 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

சென்னை,

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1.1.2019 தேதியன்று 18 வயதை முடித்துள்ளவர்களை வாக்காளர் தகுதி அடைந்தவர்களாக ஏற்று, தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தை இந்தியத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

1.9.2018 தேதியன்று (இன்று) அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டிடங்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள்) வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படுகின்றன.

elections.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முந்தைய சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்- 2018-ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் 5.86 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

1.9.2018 அன்று (இன்று) வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2 கோடியே 88 லட்சத்து 76 ஆயிரத்து 791 பேர் ஆண்கள்; 2 கோடியே 94 லட்சத்து 7 ஆயிரத்து 404 பேர் பெண்கள்; 5,184 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

6.07 லட்சம் வாக்காளர்களுடன், மாநிலத்திலேயே அதிக அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. அங்கு ஆண்கள் 3.05 லட்சம்; பெண்கள் 3.02 லட்சம்; மூன்றாம் பாலினத்தவர் 73 பேர் உள்ளனர்.

1.64 லட்சம் வாக்காளர்களுடன் மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி உள்ளது. அங்கு ஆண்கள் 86 ஆயிரம்; பெண்கள் 78 ஆயிரம்; மூன்றாம் பாலினத்தவர் 48 உள்ளனர்.

8.9.2018, 22.9.2018, 6.10.2018 மற்றும் 13.10.2018 ஆகிய நாட்களில் கிராம சபை, உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகம் படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.

9.9.2018, 23.9.2018, 7.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல்கள், இடம் மாற்றுதல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அங்கே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் அளிக்கலாம்.

முதன்முறையாக விண்ணப்பிப்போரை (அதாவது 18-25 வயதிலுள்ள மனுதாரர்கள்) தவிர மற்ற மனுதாரர்கள் அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை நம்பரையும் படிவத்தில் குறிப்பிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் பெயர் நீக்கம்

அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் ஊரகப்பகுதியில் 1,200 வாக்காளர்கள், நகர்ப்புறங்களில் 1,400 வாக்காளர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகளில் தற்போது 1,692 கூடுதலாக சேர்க்கப்பட்டு, மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 644 ஆக உயர்ந்துள்ளது.

கடந்தமுறை வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த இறந்த வாக்காளர்களின் பெயர்கள், இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் என மொத்தம் 5.78 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்த காலகட்டம் முன்பு ஒரு மாதமாக இருந்தது. தற்போது அதை 2 மாதங்களாக நீட்டித்துள்ளோம். எனவே பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்றவற்றை அளிப்பதற்கான காலகட்டத்தை 31.10.2018 வரை நீட்டித்துள்ளோம்.

அதன்படி விண்ணப்பங்களை அளிப்பதற்காக கடைசி நாள் 31.10.2018 ஆகும். இந்த 2 மாதங்களில் ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலங்களிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம். ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

திருத்தங்களை மேற்கொண்டு, இறுதி வாக்காளர் பட்டியலை 4.1.2019 அன்று வெளியிடுவோம். அதன் பின்னரும் பட்டியல் மேம்படுத்தப்பட்டு துணைப் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பியுள்ளோம். அதன் பிறகு 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் இடையில் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் அப்போது இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தலாமா என்ற யோசனையில் இந்திய தேர்தல் கமிஷன் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story