ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லையே? தி.மு.க., காங்கிரஸ் ஆதங்கம்
தலைமை தேர்தல் அதிகாரி கூட்டிய கூட்டத்தில், “ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பண பட்டுவாடா புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே?” என தி.மு.க.வும், காங்கிரசும் ஆதங்கம் தெரிவித்தன.
சென்னை,
1.1.2019 தேதியன்று 18 வயதை முடித்துள்ளவர்களை வாக்காளர் தகுதி அடைந்தவர்களாக ஏற்று, தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்காக இன்று (1.9.2018) அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படுகின்றன.
இதற்காக நேற்று அனைத்துக் கட்சி கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும், தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அழைக்கப்பட்டு இருந்தன.
ஒரு கட்சிக்கு 2 பேர் என்ற வீதத்தில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அது வருமாறு:-
பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.):- தேர்தல் கமிஷனால் புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் முகவர்களை நியமிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கோரிக்கை விடுத்தார்.
வாக்காளர் பட்டியலை முறையாக, சிறப்பாக தயாரிக்க வேண்டும். வாக்குச்சாவடி அளவிலான அலுவலர், வாக்குச்சாவடி முகவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். நியாயமான வாக்காளர் பட்டியலை உருவாக்க வேண்டும் என்று எங்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்தோம்.
கிரிராஜன் (தி.மு.க.):- 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், சேர்த்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. எதிர்காலத்தில் நடக்கக்கூடிய தேர்தல்களில் முற்றிலும் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
மேலும், இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த விதிமுறை மீறல்கள், கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாகவும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற எங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளோம்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் பற்றி இணையதளத்தில் வெளியிடுவதில்லை. தகுதியான நபர்களை அங்கு நியமிக்க வேண்டும். ஆவணங்களைப் பரிசீலித்து தகுதியற்ற வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். நூறு சதவீதம் சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
ஜெய்சங்கர் (பா.ஜ.க.):- வாக்காளர் பட்டியலை திருத்தும்போது கட்சிகளின் முகவர்களுடன் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் தவறுகள் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடியும்.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்படுவது பெரிய பிரச்சினையாக உள்ளது. இதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):- திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் 1.9.2018 அன்று (இன்று) வெளியிடப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கட்சி முகவர்களை நியமிக்கும்படி தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்; அவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை சட்டசபை தொகுதிக்கான தேர்தல் அதிகாரி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
வேட்பாளர்கள் செய்யும் செலவு தொடர்பாக சட்டத்திருத்தங்கள் உள்ளன. அதற்கான வரையறைகளும் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இதற்கான நடைமுறை வேறாக உள்ளது. எவ்வளவு தொகை செலவிட வேண்டும் என்ற வரையறை பின்பற்றப்படாமல் உள்ளது. எனவே வேட்பாளர்களின் செலவை நிர்ணயிக்கப்பட்ட வரையறைக்குள் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அளித்த புகார் மீது தேர்தல் கமிஷனிடமும், போலீசிடமும் அறிக்கை தரப்பட்டது. ஆனால் அதில் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பற்றி கேள்வி எழுப்பினோம்.
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தற்கான போதிய ஆதாரம் இருந்த போதும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
மதிவாணன் (தே.மு.தி.க.):- தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதுபற்றி பரிசீலிப்பதாக தேர்தல் கமிஷன் சார்பில் கூறப்பட்டது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story