18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் விசாரணை முடிந்தது ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு


18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் விசாரணை முடிந்தது ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 1 Sep 2018 12:15 AM GMT (Updated: 31 Aug 2018 10:51 PM GMT)

18 எம்.எல்.ஏ.க்கள் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிவடைந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

சென்னை, 

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், தமிழக கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதம் கொடுத்தனர்.

இதுகுறித்து அரசு தலைமை கொறடா கொடுத்த புகாரின் அடிப்படையில், விளக்கம் அளிக்குமாறு அவர்களுக்கு சபாநாயகர் தனபால் கட்டளையிட்டார். அதன்படி, அந்த 19 எம்.எல்.ஏ.க்களில் ஜக்கையன் மட்டும் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, அவரை தவிர தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரி என்று தலைமை நீதிபதியும், தவறு என்று நீதிபதி எம்.சுந்தரும் தங்கள் தீர்ப்பில் கூறி இருந்தனர்.

இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கை கடந்த ஜூலை 21-ந் தேதி முதல் விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில், சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், தமிழக முதல்-அமைச்சர் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா சார்பில் முகுல் ரோத்தகி, மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன், ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இந்த நிலையில், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இந்த வழக்கில் நேற்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது.

அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல். ஏ.க்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில் கூறியதாவது:-

கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்ததால், ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தனர் என்று கூற முடியாது. 18 பேரும் எதிர்க்கட்சியான தி.மு.க. வுடன் கூட்டு சேர்ந்து செயல்படவில்லை. கவர்னரை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பதில் தவறு இல்லை என்று எடியூரப்பா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு அளித்து உள்ளது.

எனவே, இதற்காக 18 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிராக எந்த செயல்களிலும் 18 பேரும் ஈடுபடவில்லை. தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு உள்நோக்கம் கொண்டது. எனவே, சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சபாநாயகரின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் வாதாடுகையில் கூறியதாவது:-

18 பேருக்கும் போதிய காலஅவகாசம் வழங்கிய பின்னரே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் இயற்கை நீதி மீறப்படவில்லை. முதல்- அமைச்சரை மாற்றும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று தெரிந்தும், அவரிடம் முதல்-அமைச்சருக்கு எதிராக கடிதம் கொடுத்து உள்ளனர். இதன்மூலம், ஆட்சியை கலைப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டு உள்ளனர் என்பது தெரிகிறது. எனவே 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது சரிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து நீதிபதி எம்.சத்தியநாராயணன், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஐகோர்ட்டு வழங்கும் தீர்ப்பு, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story