சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க கண்காட்சி
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க கண்காட்சியை, தமிழக கவர்னர் தொடங்கி வைத்தார்.
சென்னை,
மத்திய பா.ஜ.க. அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று தொடங்கியது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார்.
கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஏ.மாரியப்பன், மண்டல விழிப்புணர்வு அலுவலக இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-
மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு மேற்கொண்ட சாதனைகள் மக்கள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக வங்கி சேவைகள் கிடைக்கப்பெறாத ஏழைகளுக்கான ‘ஜன்தன்’ திட்டத்தின்கீழ், புதிதாக 31 கோடியே 52 லட்சம் பேர் வங்கி கணக்குகளை திறந்துள்ளனர். கோடிக்கணக்கான ஏழை மக்கள் வீடுகளில் புகையற்ற நிலையை பிரதமரின் ‘உஜ்வாலா’ திட்டம் உருவாக்கி இருக்கிறது. இதன்மூலம் நாட்டில் உள்ள 3 கோடியே 80 லட்சம் மகளிருக்கு ‘கியாஸ்’ இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. முத்ரா மற்றும் இந்தியாவை நிலைநிறுத்தும் திட்டங்கள் வழியாக மகளிர் தொழில்முனைவோர் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டனர். இதன்மூலம் 12 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர்.
1986-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது சாலையில் நடந்து சென்றபோது, என்னிடம் இருந்த காலி குளிர்பான பாட்டிலை அருகில் இருந்த மரத்தடியில் வீசினேன். சில நிமிடங்களிலேயே அந்நாட்டு போலீசார் என்னை சூழ்ந்துவிட்டனர். குப்பை தொட்டியில் போடாமல், மரத்தடியில் வீசிய பாட்டிலுக்கு என்னிடம் 10 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.709) அபராதம் வசூலித்தனர்.
எனவே ‘தூய்மை இந்தியா’ திட்டம் நமக்கு அவசியமான ஒன்று. தூய்மையில் முன்னேறிவிட்டால் அனைத்து துறைகளிலும் எளிதில் வளர்ச்சி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சி வருகிற 5-ந்தேதி வரை நடக்கிறது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் என அனைவரும் கண்காட்சியை பார்க்கலாம். அனுமதி இலவசம். குறிப்பாக கண்காட்சியில் ‘செல்பி பூத்’ வைக்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டால், அந்த நபரின் செல்போன் எண் மற்றும் இ-மெயிலிலும் அந்த புகைப்படம் அனுப்பி வைக்கப்படுகிறது.
Related Tags :
Next Story