மதுரையில் ‘ராகிங்’கில் ஈடுபட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் 20 பேர் இடைநீக்கம்


மதுரையில் ‘ராகிங்’கில் ஈடுபட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் 20 பேர் இடைநீக்கம்
x
தினத்தந்தி 1 Sep 2018 10:15 PM GMT (Updated: 2018-09-02T03:23:25+05:30)

மதுரையில் மருத்துவ கல்லூரி விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து ராகிங்கில் ஈடுபட்ட 20 மாணவர்கள் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் கொடுமைக்கு ஆளாவதை தடுக்க தனி வளாகத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விடுதி உள்ளது.

இந்த நிலையில் 2-ம் ஆண்டு மாணவர்கள் கும்பலாக சுவர் ஏறிக்குதித்து, அத்துமீறி அந்த வளாகத்துக்குள் நுழைந்து, ராகிங்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முதலாம் ஆண்டு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த 2-ம் ஆண்டு மாணவர்கள், அந்த மாணவர்களை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

தாக்குதலினாலும், ராகிங் கொடுமைக்கு ஆளானதாலும் காயமடைந்த மாணவர்கள், இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன்பேரில் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களிடம் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று மருத்துவ கல்லூரியில் செயல்பட்டு வரும் ராகிங் தடுப்பு குழுவினருடன், கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் மருதுபாண்டியன் கூறும்போது, “முதலாம் ஆண்டு மாணவர்களை, 2-ம் ஆண்டு மாணவர்கள் 20 பேர் ராகிங் செய்துள்ளனர். இது விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த 20 மாணவர்களும் 6 மாதத்திற்கு கல்லூரியில் இருந்தும், விடுதியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த தகவல் மாணவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் வரும் காலங்களில் யாரும் ராகிங்கில் ஈடுபடக்கூடாது, மீறி ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும்” என்று கூறினார்.

ராகிங் செய்ததால் மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 20 பேர் மீது நடவடிக்கை பாய்ந்து, அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story