தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 8-ந்தேதி நடக்கிறது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறை யாக, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் 8-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னை,
மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றதை தொடர்ந்து முதல் முறையாக கட்சி நிர்வாகிகளை அழைத்து கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இதற்கான கூட்டம் 8-ந்தேதி அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 8-ந்தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய கட்சி பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கான வியூகம் இந்த கூட்டத்தில் வகுக்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வரும் தீர்ப்பை பொறுத்து, தி.மு.க. எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது பற்றியும், தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும், அதனை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து தெரு முனை கூட்டம் நடத்துவது, பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், துண்டு பிரசுரம் வினியோகிப்பது குறித்தும் முக.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளதாக தி.மு.க. வட்டாரம் தெரிவித்தது.
Related Tags :
Next Story