குன்றத்தூர் அருகே பயங்கரம் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய் தப்பி ஓட்டம்


குன்றத்தூர் அருகே பயங்கரம் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 1 Sep 2018 11:15 PM GMT (Updated: 2018-09-02T04:41:12+05:30)

பாலில் விஷம் கலந்து கொடுத்து 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீடுகள் வாங்க, கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர். அஜய், குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

விஜயின் சொந்த ஊர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஆகும். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்ததால் தனது குடும்பத்துடன் மூன்றாம்கட்டளையில் உள்ள இந்த வீட்டில் குடியேறினார். கணவன்-மனைவி இருவரும் பட்டப்படிப்பு படித்து உள்ளனர்.

செல்போன் ‘சுவிட்ச் ஆப்’

மாத கடைசி என்பதால் நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவியும், குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.

வேலை அதிகம் இருந்ததால் விஜய், நேற்று முன்தினம் இரவு வங்கியில் தங்கி விட்டார். நேற்று அதிகாலையில் அவர், தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே அபிராமியின் மொபட் இல்லை. எனவே அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று இருக்கலாம் என்று கருதிய விஜய், தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.

ஆனால் அபிராமி அங்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விஜய், தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

விஷம் கொடுத்து கொலை

இதனால் பதறிப்போன விஜய், மீண்டும் தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு சாத்தப்பட்டு, வெளிப்புறமாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. விஜய், கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு தனது 2 குழந்தைகளும், வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளின் உடலை பார்த்து விஜய் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, போலீசுக்கு பயந்து அபிராமி தப்பிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கணவன்-மனைவி தகராறு

சம்பவ இடத்துக்கு அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த அஜய், கார்னிகா இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

விஜயின் மனைவி அபிராமி, அந்த பகுதியில் உள்ள அனைவருடனும் சிரித்து பேசி, இயல்பாக பழகியதாக தெரிகிறது. இது விஜய்க்கு பிடிக்கவில்லை. மனைவி மீது அவர் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அபிராமி, அடிக்கடி கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகில் பெரியபனிச்சேரியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விடுவார்.

பெற்றோர் அறிவுரை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடைக்கு சென்று பிரியாணி சாப்பிட்டார். அப்போது அந்த கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக அபிராமி, தனது குழந்தைகளை விட்டு, விட்டு எங்கோ சென்றுவிட்டார். பின்னர் அவரது பெற்றோர், அபிராமிக்கு அறிவுரைகள் கூறி மீண்டும் கணவர், குழந்தைகளுடன் சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தி சென்றனர்.

பாலில் விஷம்

நேற்று முன்தினம் விஜய்க்கு பிறந்தநாள். அவர் மனைவி, குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மதியம் 12 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது அபிராமியும், தனது கணவரை இன்முகத்துடன் வழியனுப்பிவைத்தார்.

ஆனால் அதன்பிறகு கணவர் மீது ஏற்பட்ட கோபம் காரணமாக நேற்று முன்தினம் இரவு அபிராமி, ஈவு இரக்கம் இன்றி தனது குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தார். அது விஷம் என்று தெரியாமல், பாசத்துடன் தாய் தருவதாக நினைத்து இருவரும் அதை வாங்கி அருந்தினர்.

விஷம் குடித்த குழந்தைகள் இருவரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகு அபிராமி, கதவை வெளிப்புறமாக சாத்தி, தாழ்ப்பாள் போட்டு விட்டு, மொபட்டில் எங்கோ சென்றுவிட்டார். அபிராமி, அடிக்கடி இதுபோல் அருகில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விடுவார் என்பதால் அக்கம் பக்கத்தினருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. விஜய் வந்து பார்த்த பிறகுதான் குழந்தைகளை கொலை செய்து விட்டு, அபிராமி தப்பிச்சென்று இருப்பது தெரிந்தது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

குறுந்தகவல்

இதற்கிடையில் நேற்று காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர்களின் செல்போன்களுக்கு அபிராமியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் அவர், “எனது குழந்தைகளே சென்று விட்டபிறகு, இனி நான் இருந்தால் என்ன?, செத்தால் என்ன?” என குறிப்பிட்டு இருந்தார்.

அதை பார்த்த விஜய், “ஏன் இப்படி செய்தாய்? எனக்கேட்டு மீண்டும் மனைவியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார். ஆனால் அவரிடம் இருந்து அதற்கு பதில் வரவில்லை. இதனால் அவரது செல்போனுக்கு விஜய், தொடர்பு கொண்ட போது மீண்டும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

ஊழியரிடம் விசாரணை

அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்தபோது, கடைசியாக கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. எனவே அபிராமி, தனது வீட்டில் இருந்து மொபட்டில் கோயம்பேடு சென்று அங்கிருந்து பஸ்சில் வெளியூர் தப்பிச்சென்று இருக்கலாம் என தெரிகிறது.

அவர் எடுத்துச்சென்ற மொபட்டை எங்கு விட்டுள்ளார்? என்று தெரியவில்லை. அதையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அபிராமியுடன் தொடர்பில் இருந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்தை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சுந்தரம், அபிராமி வீட்டின் அருகே வந்து சென்றதை பார்த்ததாக அக்கம் பக்கத்தினரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும் அபிராமியின் செல்போனுக்கு இதுவரை யாரெல்லாம் தொடர்பு கொண்டு பேசினார்கள்?, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

2 தனிப்படைகள் அமைப்பு

குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விஜய், அவரது உறவினர்கள் மற்றும் வீட்டில் வசிப்பவர்கள் என பலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் குன்றத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பெற்ற தாயே, தனது 2 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story