அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசில் தி.மு.க. மனு


அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசில் தி.மு.க. மனு
x
தினத்தந்தி 4 Sept 2018 4:30 AM IST (Updated: 4 Sept 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை சோதனை அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசில் தி.மு.க. புகார் அளித்துள்ளது.

சென்னை,

சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை இயக்குனர் அலுவலகம், தலைமை செயலகத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நேற்று புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ரூ.20 லட்சம் ரொக்கப் பணம், ரூ.12 லட்சத்து 96 ஆயிரம் என்று எழுதப்பட்டிருந்த சத்துணவு திட்ட பணி ஆணை போன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம் நடத்திய விசாரணையில், வேலை வழங்குவதற்காக பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ.12 லட்சத்து 96 ஆயிரம் பணம் பெறப்பட்டதாக கூறியுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு தொடர்புடைய நபர்களிடம் இருந்து ரூ.20 கோடியே 75 லட்சத்து 91 ஆயிரத்து 500 பெறப்பட்டதற்கான ரசீதுகள் கிடைத்துள்ளன.

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான திருவேங்கைவாசலில் உள்ள குவாரியில் விதிமுறைகளை மீறி பாறைகள் எடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் கமிஷனர், சுற்றுச்சூழல் கணக்கெடுப்பு குழுமத்தின் செயலாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர். எனவே விஜயபாஸ்கர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சி தரப்பில் இருந்து போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்ககம் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது வேதனை அளிப்பதாக உள்ளது. வருமான வரித்துறை உங்களுக்கு தகவல்களை அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு அடிப்படை விசாரணை தேவை இல்லை என்ற வகையில் ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறது.

எனவே அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடன் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story