மாநில செய்திகள்

திருச்சி கொள்ளிடம் அணையில் ராணுவ குழுவினர் திடீர் ஆய்வு + "||" + Trichy Kollidam Dam The military team sudden inspection

திருச்சி கொள்ளிடம் அணையில் ராணுவ குழுவினர் திடீர் ஆய்வு

திருச்சி கொள்ளிடம் அணையில் ராணுவ குழுவினர் திடீர் ஆய்வு
திருச்சி கொள்ளிடம் அணையில் வெள்ளத்தால் உடைந்த மதகுகளையும், சீரமைப்பு பணிகளையும் ராணுவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி,

திருச்சி மாவட்டம், முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் அணையில் வெள்ளம் காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. இதனை சீரமைக்கும் பணியில் இரவு, பகலாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அணையின் அருகே தண்ணீரில் மணல் மூட்டைகள், பாறாங்கற்களைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தண்ணீர் வீணாக ஆற்றில் செல்லும் இடத்தில் பாறாங்கற்களை போட்டு அடைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொள்ளிடம் அணையில் உடைந்த மதகுகளையும், சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சீரமைப்பு பணிகள் 40 சதவீதம் கூட முடியவில்லை எனவும், இந்த பணிக்கு ராணுவத்தை அழைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். இதே கோரிக்கையை விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு ராணுவ பயிற்சி முகாமில் இருந்து என்ஜினீயர் மேஜர் அரவிந்த் தலைமையில் ஹவில்தார்கள் நாகராஜ், தினேஷ் உள்பட 4 பேர் கொண்ட குழுவினர் ராணுவ வாகனத்தில் நேற்று காலை 7 மணி அளவில் முக்கொம்பு மேலணைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அணையில் இறங்கி உடைந்த மதகுகள் பகுதியையும், அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளையும், இரும்பு குழாய்கள் தண்ணீரில் பொருத்தப்படுவதையும் ஆய்வு மேற்கொண்டனர்.

அணையின் மேல் பகுதியில் உள்ள பாலத்தில் ஏறி நின்றும் பார்வையிட்ட அவர்கள் தாங்கள் வைத்திருந்த தொலைநோக்கி கருவி மற்றும் நவீன தொழில்நுட்ப கருவி மூலம் அணையில் உடைந்த மதகுகள் பகுதியை அளவீடு செய்தனர். சீரமைப்பு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வை தொடர்ந்து ராணுவம் சீரமைப்பு பணியை மேற்கொள்ளும் என பரவலாக பேசப்பட்டது. முக்கொம்புக்கு வந்த ராணுவ குழுவினரின் பயிற்சி மையம் சென்னை ரெஜிமண்ட் ராணுவ மையத்துடன் தொடர்புடையது எனவும், அங்கு வந்திருந்த ராணுவ குழுவினர் என்ஜினீயர்கள் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

5 மணி நேரம் அணைப்பகுதியில் இருந்த ராணுவ குழுவினர் பகல் 12 மணி அளவில் பெங்களூரு புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளின் படி ராணுவ குழுவினர் அணையில் சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். பணிகள் முழுவதும் திருப்திகரமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்’ என்றார்.