குட்கா விவகாரம் : முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்


குட்கா விவகாரம் : முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்
x
தினத்தந்தி 5 Sept 2018 6:27 PM IST (Updated: 5 Sept 2018 6:27 PM IST)
t-max-icont-min-icon

குட்கா விவகாரத்தில் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் சம்பத் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை

சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் போன்ற போதைப்பொருட் கள் அந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

மேலும் குட்கா மற்றும் பான்பராக் விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. அந்த சோதனையின்போது, ரகசிய டைரி ஒன்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அந்த டைரியில் குட்கா விற்பனையில் வரி ஏய்ப்பு செய்வதற்கு அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடந்தையாக செயல்பட்ட தகவல்கள் இருந்தன.

மத்திய கலால் வரித்துறை, தமிழக உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை, போலீஸ் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ரூ.47 கோடி வரை மாமூல் கொடுக் கப்பட்டதாக ரகசிய டைரியில் தகவல் எழுதப்பட்டு இருந்தது.

குடகா ஊழல் வழக்கில்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

 குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி டெல்லி சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் குட்கா ஊழல் பிரச்சினை தொடர்பாக கடந்த மே மாதம் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் 8 பேர் சென்னையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். குட்கா ஊழல் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் பெயர் பட்டியலை சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து வந்தனர்.

கடந்தவாரம்  குட்கா அதிபர் மாதவராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில் இன்று  தமிழகத்தில் முன்னாள்  போலீஸ் கமி‌ஷனர்  ஜார்ஜின் முகப்பேர்  வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் 120க்கும்  மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சிபிஐ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்திய விவரம் வருமாறு:

 * அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீடு, அமைச்சரின் உதவியாளர், 

* நொளம்பூரில் உள்ள முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீடு

* முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சில பினாமிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

* டி.ஜி.பி ராஜேந்திரன் வீட்டில் சி.பி.ஐ சோதனை  

* உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், லட்சுமி நாராயணன், சிவக்குமார் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

* மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் குல்சார் பேகம், என்.கே.பாண்டியன், சேஷாத்ரி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

 * விற்பனை வரித்துறை அதிகாரிகள் பன்னீர்செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன் ஆகியோரது வீடுகளிலும் சிபிஐ சோதனை.

* தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தில் அரசு காவலர் குடியிருப்பில் வசிக்கும்  தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சம்பத்  வீட்டில் முக்கிய ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story